கஷ்டபிரதேச பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு நியமனங்கள் வழங்கினால், தாங்கள் நோயாளிகள் எனக்கூறி தங்கள் வீட்டிற்கு அருகில் மாற்றலாகி வரும் ஆசிரியர்களை ஆசிரியர் பணியில் வைத்திருக்காதீர்கள் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (27) இரண்டாவது நாளாக இடம்பெற்றதுஇதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கல்வியற் கல்லூரி மற்றும் நுண்கலைப்பீடங்களிலிருந்து வெளியேறி ஆசிரியராகக் கடமையாற்றச் செல்பவர்களுக்கு 5 வருடங்கள் கஷ்டப்பிரதேசத்தில் கடமையாற்ற வேண்டும் என்று கூறியே நியமனக் கடிதங்கள் வழங்கப்படுகின்றன.
இருந்தும், அவர்கள் ஒரு சில வருடங்களிலே தாங்கள் நோயாளிகள் என்றும் அல்லது பிற காரணங்கள் கூறியும் மாற்றலாகி யாழ்ப்பாணத்திற்கு வருகின்றனர். திருமணமான பெண் தனது தாய் வீட்டிற்குப் பிரசவத்திற்குச் செல்வது போல இவர்கள் செய்கின்றனர்.
இவர்கள் இங்கு வந்தும் எவ்வாறு கல்வி கற்பிக்கப் போகின்றார்கள்?. நோயாளிகளான இவர்களை ஆசிரியர்களாக வைத்திருக்கக்கூடாது. இவர்களினால் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இவர்களை கட்டாய ஓய்வில் அனுப்புவதே சிறந்த வழியென அவர் மேலும் தெரிவித்தார்.