நீதியமைச்சரும் , சட்டமா அதிபரும் நாட்டில் இல்லாமையினால் அவர்கள் நாடு திரும்பியதும் அவர்களுடன் கலந்துரையாடி நல்லதொரு முடிவினை கூறுவதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளதாக ஜனாதிபதியுடன் சந்திப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி , நேற்று (19) மதியம் 12.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் சந்திப்பொன்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில், வடமாகாண ஆளுநர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ணாயக்க, சிறைச்சாலைகள் அமைச்சர் சுவாமிநாதன் , பாதுகாப்பு துணை அமைச்சர் ரூவான் விஜயவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அலுவலகர்கள், வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் , கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கோ.கருணாகரம்(ஜனா) , ரெலோவின் பிரச்சார செயலாளர் கணேஸ் வேலாயுதம், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உபதலைவர் கந்தசாமி சதீஸ் மற்றும் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று அரசியல் கைதிகளான மதியரசன் சுலக்சனின் தாய் , மாமி, கணேசன் தர்சனின் தாய் , தம்பி மற்றும் இராசதுரை திருவருளின் மனைவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த சந்திப்பில் அரசியல் கைதிகளின் நிலைப்பாடு தொடர்பில் எடுத்து கூறப்பட்ட போது , அவற்றை நிதானமாக செவிமடுத்த ஜனாதிபதி ,நியாயமான கருத்துக்கள் என கூறி அவைகளை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்ததுடன் , நீதி அமைச்சரும் ,சட்டமா அதிபரும் நாட்டில் இல்லை எனவும் ,மிக விரைவில் நல்ல முடிவை தெரிவிப்பதாகவும் தம்மிடம் ஜனாதிபதி தெரிவித்ததாக சந்திப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்