நின்று கொல்லும் சோடா

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????“அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்” என்பதன் உண்மையை நாம் எம்முன்னோர்களிடமிருந்தும், அனுபவ ரீதியாகவும் தெரிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் நஞ்சு அன்று கொல்லும் சோடா நின்று கொல்லும் என்ற விடயம் எம்மில் பலருக்குத் தெரியாது. சோடா சக்தி தரும் ஒர் ஆரோக்கிய பானம் என்று நம்பி ஏமார்ந்து கொண்டிருக்கின்றோம்.

பெருகிவரும் சோடா குடிக்கும் பழக்கம் சுகாதாரத்துறைக்குப் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. இதன் காரணமாகப் பல சுகதேகிகள் இளம் வயதிலேயே பல்வேறு நோய்த்தாக்கங்களுக்கு ஆளாகிவருகின்றார்கள்.

சோடா குடிப்பதால் முக்கியமாகப் பற்சிதைவும் பல்சம்பந்தமான நோய்களும், எலும்பு பலவீனமடைதலும், மூட்டு சம்பந்தமான நோய்களும் உடல்நிறை அதிகரிப்பு சலரோகம், குருதியில் PH மட்டத்தில் ஏற்படும் மாறுபாடுகள், குருதி அமுக்கநோய், குருதியில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், இருதய நோய்கள், ஓஸ்ரியோ போறோசிஸ் போன்ற நோய்களும் ஏற்படும்.

இவ்வாறான ஆபத்தான பானங்கள் திருமண வீடுகளிலும் பொது நிகழ்வுகளிலும் ஏன் நோயாளர்களுக்கும் கூட பரிமாரப்பட்டு வருகின்றன என்பது ஒரு வேதனையான விடயமாகும். இளம் வயதிலேயே பலருக்கு நீரிழிவு நோய், கொலஸ்ரோல் அதிகரிப்பு, நிறை அதிகரிப்பு போன்றவை ஏற்படுவதற்கு அதிகரித்த சோடா பாவனை ஒரு முக்கியமான காரணமாக விளங்குகின்றது.

அற்தமான உணவுகளான முட்டையையும் பாலையும் குடிக்கப் பயப்படும் நம்மவர்களுக்கு ஆபத்தான சோடா வகைகளைப் போத்தல் போத்தலாக வாங்கிக்குடிக்கும் துணிவு எங்கிருந்து வந்தது. அனைவரும் சுகமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ள எமக்கு பிறருக்கு சோடா கொடுக்க எப்படி மனம் வந்தது. வேலைச்சுகத்துகக்காகச் சோடாவை கொடுத்து உடற் சுகத்தைக் கெடுத்துக் கொள்வதா? எங்கும் எதற்கும் சோடா கொடுக்கும் பழக்கத்தைப் பார்க்கும் போது “வை திஸ் கொலைவெறி” என்னும் பாடல் தான் ஞாபகம் வருகின்றது.

நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, முழுவியளம் பார்த்து, சகுனம் பார்த்து, மங்கலகரமாகச் செய்யும் சுபகாரியங்களுக்கும் கூட இந்த ஆபத்தான சோடா வகைகளைப் பரிமாறும் பாரம்பரியம் எங்கிருந்து வந்தது. சோடா குடிக்க வேண்டாம் என்று சொன்னால் “அப்போ தாகத்திற்கு எதைக் குடிப்பது?” என்று கேட்பவர்களுக்குப் பதிலாக எதைச் சொல்வது? எம் சந்ததியின் சுகத்துக்காக நாம் சிந்திக்கவேண்டி இருக்கிறது.

காலம் காலமாக நாம் பாவித்து வந்த இயற்கையான பாதுகாப்பான குடிபான வகைகளை நாம் மீண்டும் பாவிக்க முயலுவோம். நின்று கொல்லும் பானமான சோடவைக் குடிப்பதையும் கொடுப்பதையும் நிறுத்துவோம். இயற்கையான பானங்களான பழசரம், இளநீர், தேசிக்காய்த் தண்ணீர், மழைநீர், மோர், குத்தரிசிக் கஞ்சி, வீட்டிலே தயாரித்த கூழ், சுட்டு ஆறிய நீர், பால், சீனி சேர்க்காத தேநீர், தோடம்பழத் தண்ணீர், ரசம், குடிநீர், சூப், போன்ற பானங்களை அருந்துவது சிறந்தது.

அதிகளவு சீனிச்சத்தும் இரசாயனப் பதார்த்தங்களும் சுவையூட்டிகளும் நிறமூட்டிகளும் சேர்க்கப்பட்டு பல்வேறு வகையான விளம்பரங்களுடன் விற்பனையாகும் சோடா வகைகளிடம் நாம் ஏமாறப் போகிறோமா? வருத்தத்தை விலைகொடுத்து வாங்கப் போகிறோமா? இளம் வயதில் எமது பிள்ளைகளை நீரிழிவு நோயாளியாகப் பார்க்க ஆசைப்படுகிறோமோ? எலும்பு, மூட்டு நோய்களுக்கு ஆளாகி நோவால்அவதிப்படப் போகிறோமா? சோடாவை வாங்கும் முன் இவற்றைச் சிந்திப்போம். அமங்கல பானமான சோடாவை மங்கலகரமான நிகழ்வுகளிற் பரிமாறுவதை நிறுத்துவோம். பொது நிகழ்வுகளில் சுலபமாகப் பரிமாறக்கூடிய ஆரோக்கியமான பானங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்குவோம்.

சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்.
யாழ் போதனாவைத்தியசாலை.

மேலும் கட்டுரைகளுக்கு…