Ad Widget

நாவற்குழியில் சிங்களவரின் கட்டடங்கள்; பிரதேச சபை கண்டுகொள்ளாதமை ஏன்?

home_navatkuliநாவற்குழியில் பிரதேச சபையின் அனுமதியின்றி சிங்கள மக்களால் நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்ற போதும் அதனைச் சட்ட ரீதியாகத் தடுத்து நிறுத்துவதற்குத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சாவகச்சேரிப் பிரதேச சபை இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காமை குறித்துக் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண மக்கள் சிறு மதில் கட்டுவதாக இருந்தாலும் பிரதேச சபையின் அனுமதியின்றி அந்தப் பணியை மேற்கொள்ள முடியாது. ஆனால் சிங்கள மக்கள் வீடுகள், பொதுநோக்கு மண்டபம், தண்ணீர்த்தாங்கி என்பவற்றைப் பிரதேச சபையின் அனுமதியின்றி அமைத்துள்ள போதும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறும் நோக்குடன் 54 சிங்களக் குடும்பங்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்தன. ஆரம்பத்தில் யாழ். ரயில் நிலையத்தில் தங்கியிருந்த அவர்கள் பின்னர் நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபையின் காணியில் அத்துமீறிக் குடியமர்ந்தனர்.

ஆரம்பத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் காணியில் தற்காலிக கொட்டில்கள் அமைத்திருந்த சிங்கள மக்கள் கடந்த வருட இறுதியில் நிரந்தர வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அரச காணியிலும் சரி தனியார் காணிகளிலும் சரி எந்தவொரு கட்டடங்களை அமைப்பதாயினும் அதற்கு அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள பிரதேச சபைகளின் அனுமதி பெறப்படுவது கட்டாயமானதாகும்.

ஆனாலும் நாவற்குழியிலுள்ள சிங்கள மக்கள் சாவகச்சேரி பிரதேச சபையின் எந்தவிதமான அனுமதியையும் பெறாமல் தமக்கான நிரந்தர வீடுகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிதண்ணீர்த் தாங்கி, பொதுநோக்கு மண்டபம் என்பன அனுமதி பெறாமல் அங்கு ஏற்கனவே அமைத்து முடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 20 வீடுகள் சுவர் எழுப்பப்பட்ட நிலையிலும், 40 வீடுகள் அத்திபாரம் வெட்டப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றன.

சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மேற்படி கட்டடங்களுக்கு எதிராகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சாவகச்சேரி பிரதேச சபையினால் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இது தொடர்பாக சபையின் தவிசாளர் க.துரைராசாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, தான் அதனைக் கவனிப்பதாக அவர் கூறினார். இந்த விடயம் தொடர்பாக சாவகச்சேரி பிரதேச சபையின் செயலரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்கள் அனுமதி பெறவில்லைத்தான். நாம் வீடமைப்பு அதிகார சபைக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

நீங்கள் இதுவரை வீடமைப்பு அதிகார சபைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லையா என்று கேட்டபோது, நீங்கள் அதனைத் தலைவரிடம் கேளுங்கள் என்று கூறி தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.

சாதாரண மக்கள் தமது வீட்டில் சிறிய சுவர் எழுப்பினாலும், அதற்கு அனுமதி பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கும் பிரதேச சபையினர் சிங்கள மக்களுக்கு மட்டும் சலுகை காட்டுவதாக சாவகச்சேரிப் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Related Posts