“பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் சீனா தயாரிப்பு வலி நிவாரணி ஸ்பிரே (Spray) அடித்து எம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள்.” இவ்வாறு முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது:-
“நாம் இறுதிப் போரில் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வு முகாமில் இருந்து என்னை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கொழும்புக்கு விசாரணைக்கு என அழைத்துச் சென்றனர்.
அங்கு விசாரணையின்போது நாலாம் மாடிக்கு அழைத்துச் சென்று சீனா நாட்டு தயாரிப்பான வலி நிவாரணி ஸ்பிரே ஒன்றை எனது உடலில் அடித்தார்கள்.
அந்த ஸ்பிரே அடித்ததும் உடலில் ஒரு வித விறைப்புத் தன்மை ஏற்பட்டு உடலில் எந்தவிதமான தாக்குதலோ சித்திரவதையோ செய்தாலோ வலி இருக்காது.
அந்த ஸ்பிரே அடித்த பின்னர் தமது விசாரணைகளை தாக்குதல் மற்றும் சித்திரவதையுடன் ஆரம்பிப்பார்கள். அவ்வாறு செய்யும்போது எமக்கு எந்தவிதமான வலியோ, உணர்ச்சியோ இருக்காது.
நாம் அதன்போது வலியால் துடிக்கவோ கத்தவோ மாட்டோம். ஏனெனில் எமது உடலில் எந்த உணர்ச்சியும் இருக்காது. அதனால் அவர்கள் தம்மால் இயலும் வரை சித்திரவதை செய்தும் தாக்கியும் விசாரணைகளை மேற்கொள்வார்கள்.
அதன் பின்னர் எம்மை அங்கிருந்து அழைத்துச் சென்று தடுத்துவைப்பார்கள். குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அந்த ஸ்பிரேயின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும்போது வலி ஏற்படத் தொடங்கும்.
ஒரு காட்டத்தில் அந்த ஸ்பிரேயின் தாக்கம் முழுவதும் இல்லாமல்போன பின்னர் மரண வலி ஏற்படும் அப்போதே நாம் வலியால் துடித்துக் கத்துவோம். அது எமக்கு கடும் வேதனையைத் தரும்.
தற்போது நான் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு விட்டேன். என் மீதான தாக்குதல் மற்றும் சித்திரவதையால் நான் இன்னமும் பாதிக்கபட்டுள்ளேன்.
தற்போது என்னால் கடினமான வேலைகள் செய்ய முடிவதில்லை. வெய்யிலில் நின்றால் தலை வலிக்கும். கடும் வெப்ப காலத்தில் வீட்டில் இருந்தால்கூட கடுமையான தலைவலி ஏற்படும். தலைவலி ஏற்படும் நேரங்களில் நான் என்ன செய்வது என்று தெரியாமல் தலையை சுவரில் அடிக்க வேண்டும் போல இருக்கும். வீட்டில் உள்ள மனைவி, பிள்ளைகளுடன் ஆவேசமாகக் கத்தி சண்டை பிடிப்பேன். இதனால் மனைவி பிள்ளைகள் என்னை வெறுக்கும் நிலைக்கு சென்று உள்ளனர்.
எனவே, முன்னாள் போராளிகள் மற்றும் சித்திரவதைகளுக்குள்ளானவர்கள் அனைவரையும் மருத்துவ சிகிச்சைக்குட்பட்டுத்த வேண்டும்.
அதன் ஊடாக ஊசி ஏற்றப்பட்டமை, இரசாயான உணவு வழங்கப்பட்டமை தொடர்பில் உண்மை கண்டறியப்படவேண்டும்.
அதேவேளை, இராணுவத்தினரின் தாக்குதல்களுக்கு – சித்திரவதைகளுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களையும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி அவர்களுக்கான சிகிச்சைகளும் வழங்கப்படவேண்டும்” – என்று தெரிவித்துள்ளார்.