Ad Widget

நல்லாட்சியினூடாக தமிழ் மக்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் – அமைச்சர் விஜயகலா

நல்லாட்சியினூடாக தமிழ் மக்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்இன்று அமைக்கப்பட்டுள்ள நல்லாட்சியினூடாக தமிழ் மக்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தலினூடாக ஜனாதிபதியை மாற்றி ஆயிரம் ஏக்கர் காணிகளை எம்மக்களிடம் கையளித்துள்ளோம். அதேபோன்று 5300 ஏக்கர் காணிகளை எவ்வித இனவாதமின்றி தமிழர்களின் சொத்துக்களை அவர்களிடம் கையளிக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இடம்பெற்ற வரவுசெலவு 2016 மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மயிலிட்டி, கேகேஎஸ் , பலாலி போன்ற இடங்களிலே பத்தாயிரம் குடும்பங்களில் 1500 குடும்பங்கள் 31 முகாம்களில் கடந்த 25 வருடங்களாக வசிக்கின்றனர். 8500 குடும்பங்கள் சிநேகிதர்களுடனும் வாடகை வீடுகளிலும் வசித்து வருகின்றனர். 1500 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. இவ்வாறு அடிப்படை வசதிகள் இல்லாத சூழ்நிலையில், குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

அதேபோன்று உயர் பாதுகாப்பு வலயத்தில் பலாலி ஆசிரியர் கலாசாலையும் பல பாடசாலைகளும் தேவாலயங்களும் பள்ளிவாசல்களும் ஆலயங்களும் மூடப்பட்ட நிலையில் இருக்கின்றன. அவை மீண்டும் மக்களின் வழிப்பாட்டுக்காக திறந்து வைக்கப்படவேண்டும். சீமேந்து தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைக்கவேண்டும். யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தினர் மக்களின் காணிகளில் விவசாயத்தையும் பண்ணைகளையும் நடத்திவந்தது. மேலும் மக்களின் காணிகளில் இராணுவ விடுதிகளை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அவை மக்களின் சொந்தக் காணிகள். எதிரிகட்சியில் உள்ள ஒரு சில இனவாதிகளுக்காக எமது தமிழ் அரசியல் கைதிகளை பணயம் வைக்கக்கூடாது. கடந்த காலங்களில் எத்தனையோ தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டனர். அவை ஒழுங்காக விசாரணை செய்யப்படவில்லை. அவற்றை மீண்டும் விசாரணை செய்யவேண்டும். அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்தாவது விடுதலை செய்ய வேண்டும்.

அத்தோடு நீதிமன்றங்களை அதிகரிக்க வேண்டும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யவேண்டும், இலங்கையில் மொத்தமாக எடுத்துநோக்கும் போது 500க்கும் குறைந்த எண்ணிக்ைகயான நீதிபதிகளே உள்ளனர். ஆனால் மூவாயிரம் தொடக்கம் ஐந்தாயிரம் வழக்குகள் நீதிமன்றங்களில் இருக்கின்றன. அவற்றை இலகுவாக விசாரிக்க முடியாது. பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் சிங்களத்தில் எழுதப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே அப்பிரதேசங்களில் தமிழ் பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழில் முறைப்பாடு செய்யவும் வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts