த.தே.ம.மு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக யாழ். நீதிவான் விதித்த தடையுத்தரவு யாழ்.மேல்நீதிமன்றினால் ரத்து

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக யாழ்.நீதிமன்ற நீதிபதி விதித்த தடையுத்தரவை ரத்து செய்து தடலாடியுத்தரவொன்றை யாழ்.மேல்நீதிமன்று  பிறப்பித்துள்ளது.இலங்கை அரசினது நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பதாக கண்டன ஆர்ப்பாட்டமொன்றிற்கு விடுக்கப்பட்ட அழைப்பினை காவற்துறையினர்; முன்வைக்கப்பட்ட காரணங்களை முன்னிறுத்தி யாழ்.நீதிபதி மா.கணேசராஜா அப்போது தடை விதித்திருந்தார்.

அத்துடன் மீறி எவராவது போராட்டத்தில் குதித்தால் கைது செய்யவும் உத்தரவிடப்பட்டிருந்தது.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்புக்கள் மேன்முறையீடு ஒன்றினை யாழ்.மேல்நீதிமன்றினில் தாக்கல் செய்திருந்தன.

இம்மனு மீதான விசாரணையின் போதே யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விசுவநாதன் யாழ்.நீதிபதி மா.கணேசராஜா விதித்த தடையுத்தரவை ரத்து செய்து தடலாடியுத்தரவொன்றை  பிறப்பித்துள்ளார்.

அத்துடன் காவற்துறையினரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை மட்டும் முன்வைத்து வழங்கப்படும் தீர்ப்பு ஒரு நடுநிலையான தீர்ப்பாக மாட்டாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைதிக்கு பங்கம் ஏற்படுவதை தடுப்பதற்காக, குற்றச்செயல் நடவடிக்கை கோவையின் 95 (1) மற்றும் 95(2) பிரிவுகளின் கீழ் பொலிஸார் செயற்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 14 ஆவது ஷரத்தில் உத்தரவாதமளிக்கப்பட்ட கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், அமைதியாக கூட்டம் கூடும் சுதந்திரம் ஆகிய மனுதாரர்களின் உரிமைகள் மீறப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு, சட்டத்தின் அடிப்படையில், 18.06.2010 மற்றும் 27.06.2012 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் நீதவான் பிறப்பித்த கட்டளைகளை ரத்துச் செய்வதாக யாழ் மேல் நீதிமன்ற ஆணையாளர் தனது கட்டளையில் கூறியுள்ளார். மனுதாரர் தனது இணக்கமின்மையை வெறுமனே அந்தரங்கமாக அமைதியாக மாத்திரமல்லால், பகிரங்கமாக சொல்லாலும் செயலாலும் அமைதியான நடத்தை மற்றும் நடவடிக்கையினாலும் வெளிப்படுத்துவதற்கு உரிமையுள்ளவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.