த.தே.கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பாக முடிவுகள் ஏதுமில்லை

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான அவசரகலந்துரையாடல் ஒன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் இன்று காலை மன்னார் ஞானோதய மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், எஸ்.வினோ நோகராதலிங்கம், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், சிறிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காலை 10 மணியளவில் குறித்த கலந்துரையாடல் ஆரம்பமானது. இதன்போது மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை, அருட்தந்தையர்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கான பொது வேலைத்திட்டத்தினை அடையாளங்காணல், கட்சிகளையும் மக்கள் குழுக்களையும் உள்ளடக்கிய பொது அமைப்பொன்றை உருவாக்குவதற்கான ஆலோசனைபற்றி உரையாடல், அனைவரும் இணக்கங்காணக்கூடிய குறைந்தபட்ச அரசியல் நிலைப்பாட்டை அடையாளங்காணுவதற்கான செயல்முறை, வடமாகாணசபைத் தேர்தல், தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்கும் செயன்முறை, மாகாணசபையைக் கைப்பற்றியதன் பின்னரான நிகழ்ச்சி செயற்றிட்டம், மாகாண சபை முன்மொழிவுகளை அடையாளங்காணும் செயன்முறை, மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான செயன்முறை ஆகியவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.