பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் ஜுலை 4ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.எதிர்வரும் ஜுலை 4ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனதிற்கும் நிதி அமைச்சிற்கும் இடையில் கடந்த ஜுலை 21ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பினையடுத்து சம்மேளனதின் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்தப்பட்டன.
இதன்போது, ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைக்குஇணங்க உயர்கல்வி அமைச்சு, வேதனங்கள் மற்றும் பணிநிலை ஆணைக்குழு மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றுடன் சம்மேளனத்தின் இடைக்கால முன்மொழிவுக்கு அமைவான கோரிக்கைகளை நிறைவேற்றுதல் தொடர்பாக அதிகளவான சந்திப்புக்கள் நடைபெற்றன.
மேற்படி கோரிக்கைகளை இரு கட்டங்களாக அமுல்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. முதலாம் கட்டம் உடனடியாக அமுல்படுத்துவதாகவும் இரண்டாம் கட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்துவதாகவும் இணங்கப்பட்டது.
ஆனால் முதலாம் கட்டத்தில் உள்ளடக்கப்பட்டவற்றில் ஒரு சில கோரிக்கைகளே நிறைவேற்றப்பட்டன. இரண்டாம் கட்ட உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்ட கோரிக்கைகள் எவையும் அமுல்படுத்தப்படவில்லை.
இவ்வாறு வேண்டுமென்றே செய்யப்படுகின்ற காலங்கடத்தும் மோசமான உத்திகளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த அதிருப்தியானது கடந்த ஜனவரி 1ஆம், 30ஆம் மற்றும் பெப்ரவரி 19ஆகி தினங்களில் எழுத்து மூலமாக தெளிவாக உயர்கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது.
இதற்கான பதிலாக உயர்கல்வி அமைச்சிடமிருந்து மார்ச் 6ஆம் திகதி பெறப்பட்ட கூற்றானது வெறுமனே அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் என்பவர்களுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையே ஆகும்.
மொத்த தேசிய உற்பத்தியில் உயர் கல்விக்கான அரச ஒதுக்கீடு 2005ஆம் ஆண்டில் 3.5 சதவீதமாக இருந்தது. அது 2012ஆம் ஆண்டில் 1.9 சதவீதமாக குறைவடைந்தது.
அத்துடன் 2005ஆம் ஆண்டில் 0.52 சதவீதமாக இருந்த பல்கலைக்கழகளுக்கான ஒதுக்கீடும் 2010ஆம் ஆண்டில் 0.27 சதவீதமாக குறைவடைந்தது. பல்கலைக்கழகளின் நுண் முகாமைத்துவத்தில் உயர் கல்வி அமைச்சர் அதிகளவான அரசியல் மயப்படுத்தலை மேற்கொள்கிறார்.
எமது சம்மேளத்தின் தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் உயர் கல்வி அமைச்சானது கலந்தாலோசிக்கப்படாத தற்காலிக கல்வி சீர்திருத்தங்களை தொடர்ச்சியாக மேற்கொள்கிறது.
இந்நிலைகளை கருத்திற்கொண்டு கடந்த மார்ச் 22ஆம் திகதி நடைபெற்ற எமது சம்மேளனத்தின் நிர்வாக கூட்டத்தில் இடைநிறுத்தப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை மீள ஆரம்பிப்பது எனும் முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டது.
இதற்கிணங்க ஏப்ரல் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தமும் கொழும்பில் ஒரு ஊர்வலமும் கீழ்வரும் கோரிக்கைகளை முன் வைத்து நடாத்தப்பட்டது.
1. நிறைவேற்றப்படாத பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.
2. இந்நாட்டினது அரச கல்வி துறையினை காப்பதும் வளர்ப்பதும் தொடர்பான ஒரு உறுதிமொழியினை அரசாங்கம் வழங்க வேண்டும்.
மேற்படி கோரிக்கைகளானது எழுத்து மூலமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் உயர் கல்வி அமைச்சருக்கு முறையே ஏப்ரல் 16 மற்றும் 18ஆம் திகதிகளில் கையளிக்கப்பட்டன.
தரமான கல்வியை அனைவரும் பெறுவதன் உரிமையை வலியறுத்தவதற்காகவே எமது சம்மேளனத்தின் கோரிக்கைகள் அமைந்திருந்தன. முதலாவது கோரிக்கையானது தகுதி வாய்ந்த பல்கலைக்கழக ஆசிரியர்களை அரச பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளல் மற்றும் தக்கவைத்துக் கொள்ளல் என்பவற்றினூடாக அரச பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்துதல் என்பதாகும்.
இரண்டாவது கோரிக்கையானது இலங்கையின் அரச கல்வி முறையின் முழுமையான உயர்வு சம்பந்தப்பட்டது. இவ்வுயர்வானது வெளிப்படையான மற்றும் கலந்தாலோசிக்கப்பட்ட பல்கலைக்கழக சமூகத்தினை உள்ளடக்கியதான ஒரு திட்டத்தினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
இதற்கமைய கல்வி துறைக்கான அரச ஒதுக்கீடு அதிகரிக்கப்படுவதுடன் கல்வி துறையில் அரசியல் தலையீடு தவிர்க்கப்படுதல் வேண்டும். அரச பல்கலைக்கழகங்களை பொறுத்தவரையில் பௌதீக வளங்கள் அதிகரிக்கப்படுவதுடன் அரசியல் மற்றம் இராணுவ தலையீடற்ற சுமூகமான கல்வி சூழல் உருவாக்கப்படுவதன் மூலம் பல்கலைக்கழங்கள் சர்வதேச கற்றல் மையங்களாக மாற்றப்படல் வேண்டும்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் பிரத்தியேகமான கோரிக்கைகள்:
- மிகச்சிறந்த தகுதி வாய்ந்த கல்வியாலாளர்களை இணைத்துக் கொள்ளல் மற்றும் தக்க வைத்து கொள்ளல் தொடர்பான எமது சம்மேளனத்தின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றல்.
- இலங்கையின் மனித வளத்தை மேம்படுத்தலில் கல்வியியலாளர்களின் சிறப்புத் தேர்ச்சி பெற்ற வேலை மற்றும் கல்வியியலாளர்களை இணைத்துக்கொள்ளல்.
- பதவி உயர்வு என்பவற்றில் கடைப்பிடிக்கப்படும் கொள்கை என்பவற்றைக் கருத்தில் கொண்டு இலங்கை பல்கலைக்கழக கல்வியியலாளர் சேவை ஒன்றினை ஸ்தாபித்தல்.
- கடந்த ஜுலை 7ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இடைக்கால உடன்படிக்கையின் 2ஆம் கட்டத்திற்கு அமைவான சம்பள அளவுத் திட்டத்தை உடனடியாக அமுல்படுத்தல்.
- அடிப்படை சம்பளத்தில் 20 சதவீதமான அதிகரிப்பானது கடந்த ஜனவரி ஆம் திகதி தொடக்கம் வழங்கப்படல் வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள படிகள் யாவும் எந்தவித நிபந்தனைகளும் இன்றி வழங்கப்படல் வேண்டும்.
- அடிப்படை சம்பளத்தில் 16.67 சதவீத அதிகரிப்பு வழங்கல். மேற்படி அதிகரிப்பானது 2013ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படுவதுடன் 01-01-2013 தொடக்கம் வழங்கப்படல் வேண்டும். நடைமுறைகளில் உள்ள படிகள் யாவும் நிபந்தனைகள் ஏதும் இன்றி வழங்கப்படல் வேண்டும்.
- அரச கல்வி துறையை காப்பது மற்றும் உயர்த்துவது தொடர்பான உறுதிமொழி
- அரசடனும் உயர்கல்வி அமைச்சுடனும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை பின்வருவன தொடர்பாக ஊக்குவித்தல்.
- அடுத்து வரும் இரு வருடங்களுக்கு இடையில் கல்வி துறைக்கான ஒதுக்கீடு தேசிய உற்பத்தியிர் 6 சதவீதமாகும் வண்ணம் செயல்திட்டம் ஒன்றை விதந்துரைத்தல்.
- அரச கல்வித்துறை தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையினை தெளிவாக கூறுதல்.
- அனைத்து பங்குதாரர்களையும் பொதுமக்களையும் உள்ளடக்கியதான கலந்தாலோசிக்கப்பட்ட ஒழுங்கான நடைமுறை திட்டம் வரும் வரையில் அனைத்து கல்வி சீர்திருத்தங்களையும் இடைநிறுத்தல் தொடர்பான ஒரு உடன்படிக்கை.
- அரச பல்கலைக்கழகங்களின் நுண்முகாமைத்துவத்தில் அரசியல் தலையீடுகளை தவிர்ப்பதன் மூலம் இந்நிறுவனங்கள் சுயாதீனமாக இயங்குவதற்கான உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தல்.