தொடர்ச்சியாக உண்ணாவிரதம் மேற்கொள்வதற்கு மீள்குடியேற்றக் குழு முடிவு

tellippalai - army-saraவலி.வடக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடழிப்புநடவடிக்கைகளை உடன் நிறுத்தக் கோரியும், அந்தப் பகுதிகளை மக்கள் குடியமர்வுக்கு விடுவிக்கக் கோரியும் எதிர்வரும் 12 ஆம் திகதியிலிருந்து தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுக்க வலி.வடக்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் வலி. வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம் தலைமையில் நடைபெறும் என்று வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார். வலி.வடக்கில் தமிழ் மக்களின் உறுதிக் காணிகளான 6 ஆயிரத்து 382 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சுற்றி நிரந்தரப் பாதுகாப்பு வேலிகளை இராணுவத்தினர் அமைத்துள்ளனர்.இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் காணிகளில், இராணுவத்துக்கான யோக்கட் தொழிற் சாலை,தியேட்டர், கோல்ப் விளையாட்டு மைதானம் என்பன அமைக்கப்பட்டுள்ளதுடன் விவசாயச்
செய்கையும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த நிலங்களுக்குச் சொந்தமான மக்கள் இன்னமும் நலன்புரி நிலையங்களிலேயே தங்கியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் தாம் கையகப்படுத்தியிருந்த நிலப் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் வீடுகளைத் தரைமட்டமாக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்திருந்தனர். இதனை எதிர்த்து அந்தப் பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தது.இந்த நிலையில் 10நாள்களுக்கு முன்னர் மீண்டும் அந்தப் பகுதிகளில் இராணுவத்தினர் வீடழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதியுடன் உரையாடியபோது இந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு அவர் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்ப்பட்டது.

ஆயினும் ஜனாதிபதியின் உத்தரவையும் மீறி தொடர்ச்சியாக வீடுகள் அங்கு இடித்தழிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதனைத் தடுப்பதற்கு தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வலி.வடக்கு மீள்குடியேற்றக்குழு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் பொதுநலவாய மாநாடு நடைபெறுகின்ற சமயத்தில், சர்வதேசத் தலைவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அதே காலப்பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி காலை 8 மணிக்கு மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படும்.இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் சகலரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற தென்னிலங்கை அரசியல் சக்திகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.