Ad Widget

தொடர்கின்றது உண்ணாவிரதம்! 5 பேர் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு மயக்கம்!!

நல்லாட்சி அரசு தங்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் அரசியல் கைதிகளின் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் சிறைச்சாலைகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் கொழும்பு – மகஸின் சிறைச்சாலையில் நான்கு கைதிகள் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு நேற்று மயக்கமடைந்தனர்.

இதனையடுத்து மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உடல்நிலையை நேற்றைய தினம் சிறைச்சாலை வைத்தியர்கள் பரிசோதித்தனர்.

உடல்நிலை மோசமாகி மயக்கமடைந்திருந்த நான்கு கைதிகளையும் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்குமாறு சிறைச்சாலை வைத்தியர்கள், சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். உடனே கைதிகள் நால்வரையும் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகள் சேர்த்தனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டி. பிரபாகரன் (வயது 29), மன்னார் – சிலாவத்துறையைச் சேர்ந்த ஏ.ஞானசீலன் (வயது 32), முழங்காவிலைச் சேர்ந்த எட்வேட் சாம் சிவலிங்கம் (வயது 44), கிளிநொச்சியைச் சேர்ந்த பூபாலசிங்கம் நிஷாந்தன் (வயது 28) ஆகிய கைதிகளே வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையிலும் உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் முல்லைத்தீவு – அம்பலவன்பொக்கணையைச் சேர்ந்த கந்தசாமி விஜயகுமார் (வயது 44) என்ற கைதி நேற்று உடல் நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்துள்ளார்.

இவரின் மனைவி 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி புதுமாத்தளன் பகுதியில் வைத்து படையினரின் தாக்குதல் ஒன்றில் பலியானார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹண புஷ்பகுமார, மகஸின் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளை நேற்றைய தினமும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கைதிகள் முதல்நாள் திங்கட்கிழமை எழுத்துமூலம் ஜனாதிபதிக்கு வழங்கிய கோரிக்கை ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது எனவும், கைதிகளின் கோரிக்கையை ஜனாதிபதியின் கவனத்துக்குத் தொடர்ந்து கொண்டுசெல்வேன் என்றும் இதன்போது அவர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் மகஸின் சிறைச்சாலைக்குச் சென்ற சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனிடம் தமிழ் அரசியல் கைதிகள் மனு ஒன்றைக் கையளித்துள்ளனர். அந்த மனுவில், தமது விடுதலையைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அந்த மனுவைக் கையளிக்குமாறும் இராஜாங்க அமைச்சரிடம் கைதிகள் தெரிவித்துள்ளனர். பொதுமன்னிப்பில் தங்களை விடுதலைசெய்யுமாறு கோரி, தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பித்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts