யாழ். மாவட்டத்தில் இடைக்கிடையே பெய்துவரும் மழையின் காரணமாக டெங்கு நோயின் தீவிரம் அதிகரிக்கும் சாத்தியம் தென்படுவதாக சுகாதாரப் பகுதியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மைக்காலமாக யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்பாட்டில் இருக்கின்றபோதும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக யாழ். போதனா வைத்தியசாலையில் அநேகர் சிகிச்சை பெற்றுள்ளனர். இருந்தும் இந்நோயின் காரணமாக இறப்புக்கள் எதுவும் நிகழவில்லை.
இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் இடைக்கிடையே மழை பெய்துவருகிறது. இவ்வாறு நேற்றும் நகரின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதனால் டெங்குநோய் காவிகளான நுளம்புகள் பெருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மழைநீர் தேங்கும் இடங்களில் டெங்கு நுளம்புகள் முட்டையிட்டு டெங்கு நோய் இலகுவாக அதிகரிக்கும் சாத்தியங்கள் தென்படுவதாக சுகாதாரப் பகுதியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே தொடர்ந்தும் எமது பகுதிகளில் உள்ள டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை இனங்கண்டு அங்குள்ள காரணிகளை அழித்து விடுவதனாலும், சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமாகவும் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதாரப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மாதம் யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய்த் தொற்றுக்கு இலக்காகிய 56 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.