தேர்தலை நோக்காகக்கொண்டே காணிகள் விடுவிப்பு : த.தே.கூ

suresh-peramachchantheranநடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலை நோக்காக் கொண்டும் நவநீதம் பிள்ளையின் வருகையினைக் கருத்தில்கொண்டுமே இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

வடக்கில் வாழும் மக்களுக்கு ஜனநாயக உரிமை கிடைக்கவேண்டும் இங்கு ஒரு மாகாண சபையை உருவாக்கி அவர்கள் இதனை ஆளவேண்டும் என்ற நோக்கில் இந்த தேர்தலை நடத்த அரசாங்கம் தான் விரும்பி நடத்துவதற்கு முன்வரவில்லை மாறாக இந்தியாவின் பாரிய அழுத்தம் மற்றும் அமெரிக்க போன்ற நாடுகளின் அழுத்தங்களினாலேயே இந்த தேர்தலை நடத்த அரசாங்கம் முன்வந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பபு பல்வேறு நாடுகளுடாக கொடுத்து வரும் அழுத்தமும் ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் போன்ற பல்வேறு காரணங்களும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தேர்தல் வரக்கூடிய கால கட்டத்தில் ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை வருகையும் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ள சூழ்நிலையில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக தற்போது பொதுமக்களின் காணிகள் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு சர்வதேச ரீதியான காரணகளுக்காக காணிகள் விடப்படுகிறதே தவிர டக்ளஸ் தேவானந்தா கொடுத்த அழுத்தத்தினால் அல்ல. அவ்வாறு டக்ளஸ் தேவானந்தாவினால் செய்ய முடியும் என்றால் வலிகாமம் வடக்கில் 6500 ஏக்கர் நிலத்தை விடுவிக்க ஏன் அவரால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கெனவே இது தொடர்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்த காணிகள் விடுவிக்கப்படுகின்றதே தவிர டக்ளஸ் அழுத்தம் என்று சொல்வது தேர்தலை அடிப்டையாகக் கொண்டதேயாகும் என்றும் அவர் சொன்னார்.

யாழில், 13 ஆயிரம் இராணுவத்தினர் இருக்கிறார்கள் என்று இராணுவத்தளபதி சொல்லியிருக்கிறார். ஆனால், வடக்கில் மட்டும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் படையினர் நிலைகொண்டுள்ளனர். இதனை எவரும் இதுவரை மறுதலிக்கவில்லை. வடக்கில் 10 லட்சம் மக்கள் வாழும் பிரதேசத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் இராணுவம் தேவையா? இராணுவம் மட்டுமல்ல கடற்படை,விமாப்படையென்று பல்வேறு பிரிவுகள் இருக்கிறது. யாழில் 3 டிவிசன் படையினர் இருக்கிறார்கள் ஒவ்வொரு டிவிசனிலும் 10 ஆயிரம் படையினர் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் சுசில் பிறேமச்சந்திரன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். அவர் வருகை தந்த போது யாழில் இராணுவத்தினரை காணவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் பெருமளவான இராணுவத்தினர் சிவில் உடையில் இருக்கிறார்கள்.

இங்கு நடைபெற்று வரும் சகல நிகழ்வுகளில் இராணுவத்தின் பிரசன்னம் 100 வீதம் இருக்கிறது. சிவில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இராணுவத்திற்கு எந்தவிதமான அதிகாரம் இல்லை இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளும் அதிகாரம் பொலிசாருக்கு மட்டுமே இருக்கிறது இங்கு எல்லாமே தலைகீழாக நடைபெறுகின்றது.

யாழில் 11 கட்சிகள் 9 சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுகின்றது . இதில் அரசாங்கத்திற்கு ஆதரவான பல சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுகின்றன வடக்கில் ஜனநாயகம் இருக்கிறது என்று பொய்ப்பிரச்சாரம் காட்டுவதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் சொன்னார்.

இங்கு 20 கட்சிகள் போட்யிடுவதென்பது ஜனநாயக் செயற்பாடு அல்ல ஜனநாயக விரோத செயற்பாட்டின் வெளிப்பாடேயாகும். தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபேயின் அதிகாரி கீர்த்தி தென்னக்கோன் வடக்கு பகுதி இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதுடன் ஆசியாவிலேயே பெரும் தொகை இங்கேயே இராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கின்றார்.

தேர்தல் ஜனநாயக் முறையில் நடைபெறவேண்டும் என்றால் இராணுவம் முகாம்களுக்குள் முடங்கவேண்டும் என்பதை கூட்டமைப்பு ஆணித்தரமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றது என்றார்.

பொது மக்களின் காணிகளை விடுவிக்கின்றோம் என்று சர்வதேச ஏமாற்றுவதற்கு செயற்படும் வேலைத்திட்டங்கள் இராணுவம் முற்று முழுதாக நிறுத்தி பொது மக்களின் காணிகளின் இருந்து வெளியேறி மக்கள் மீள்குடியேற்றம் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் பலாலியை விடச் செல்லவேண்டாம் என்று ஹத்துருசிங்க சொல்வது பொருத்தமற்றது என்று அவர் தெரிவித்தார்.