Ad Widget

தெற்கில் சிலர் எம்மை வைத்து அரசியல் வியாபாரம் நடத்த முயற்சி!

தெற்கில் சிலர், எம்மை வைத்து அரசியல் வியாபாரம் நடத்த முற்பட்டிருக்கின்றார்கள் என, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 42வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றக்கிழமை நடைபெற்றது.

அந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

என்னைப் பேயாகவும், பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும் தெற்கில் உள்ளவர்கள் சித்தரிப்பதற்கு முன்னர் நான் அண்மையிலே பேசிய பேச்சை சிங்களத்திலோ ஆங்கிலத்திலோ முறையாகச் சரிவர மொழி பெயர்த்து வாசித்து விட்டு, என்னை விமர்சித்திருந்தால் அதற்கான பதிலைத் தந்திருக்க முடியும்.

ஆனால் நான் சொல்லாததை எல்லாம் சொல்லியது மனவருத்தத்தைத் தருகின்றது. 1958ல் செனவிரத்ன எனும் ஒரு சிங்களச் சகோதரரை வெட்டித் துண்டு துண்டாக்கி மீன் பெட்டிகளில் அடைத்து அனுப்பியதாக ஒரு கட்டுக் கதை கட்டி விடப்பட்டதால் தான் பல தமிழ் மக்கள் அழிக்கப்பட்டார்கள்.

சொத்துக்கள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன. அவ்வாறு அழிக்கப்பட்ட பின்னர் தான் அந்தச் செய்தி பொய் என்று தெரியவந்தது. ஆனால் அழிவு அழிவுதான்.

ஆகவே பொய் புரட்டுக்களை நம்பி அநியாயமாக மக்களிடையே பிரிவினைகளையும் முரண்பாடுகளையும் வெறுப்புணர்ச்சிகளையும் ஏற்படுத்தாது இருக்க வேண்டும்.

முக்கியமாக தெற்கில் தேர்தலில் தோற்ற சிலர், சிறைத் தண்டனைக்கு இலக்காக வேண்டிய சிலர் எம்மை வைத்து அரசியல் வியாபாரம் நடத்த முற்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் வியாபாரத்துக்காவது நான் அவர்களுக்கு பயன்பட்டுள்ளேன் என்பதில் எனக்குத் திருப்திதான்.

தேசிய விளையாட்டு நிகழ்வுகளும் தடகளப் போட்டிகளும் ஒவ்வொரு வருடமும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு அந்தந்தப் பிரதேசங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்ற வகையில் இந்த 42ஆவது தேசிய விளையாட்டு விழா யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றிருப்பது எமக்கு பெருமை அளிக்கின்றது.

எனினும் பல விளையாட்டுக்களை நடத்த எமக்கு வசதிகள் இல்லை. பிற மாகாணங்களில் தான் அவை நடாத்தப்படுகின்றன. வடமாகாணத்தில் தேசிய விளையாட்டு நடைபெறுகின்றது என்று கூறுவது எமக்குப் பெருமை தரும் அதே வேளையில் நீச்சல் போன்ற பல போட்டிகளை எம்மால் நடத்த முடியாதிருப்பதால் மனவேதனை.

வெகுவிரைவில் வடமாகாணத்திற்குள்ளேயே கிளிநொச்சியில் சகல போட்டிகளும் நடாத்தப்பட்டு தேசிய விளையாட்டு விழா மீண்டும் இங்கு நடைபெற எங்கள் மாண்புமிகு ஜனாதிபதி வழி சமைப்பார் என்று எதிர்பார்க்கின்றேன்.

இவ்வருட 42வது விளையாட்டு நிகழ்வுகளில் கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவி ஜெகதீஸ்வரன் அனித்தா 3.45 மீற்றர் உயரத்தை தாண்டி இலங்கையில் தேசிய மட்ட சாதனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எமக்கு பெருமைகளைத் தேடித் தந்துள்ளது.

மகாஜனாக் கல்லூரி என்பது போரின் பின்னர் புத்துயிர் பெற்ற ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்ட கல்லூரி. எதுவித வளங்களும் கிடையாது. போரின் வடுக்களாக கட்டிட இடிபாடுகளும், சீமெந்து கற்களும், ஓட்டுத் துண்டுகளும் பரவிக் கிடக்கின்றன. மூலதனம் பயிற்சிக்கான உபகரணங்கள் இல்லை. விளையாட்டு மைதானங்கள் சீராக இல்லை. இந் நிலையிலும் அனித்தாவின் கடின உழைப்பும் விடா முயற்சியும் அவரை சாதனையாளராக மாற்றியிருக்கின்றது.

இதே போன்று வடமாகாணத்தைச் சேர்ந்த பலர் வெற்றியாளர்களாகவும் அதில் சிலர் சாதனையாளர்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். விளையாட்டுக்கள் ஒரு வீரனுக்கு அல்லது வீராங்கனைக்கு தொடர் பயிற்சிகள் மூலமாக ஆரோக்கியமான உடல்வலுவை வழங்கி மூளைக்கு புத்துணர்வை அளிக்கின்றது என, வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts