தெரிவுக்குழுவுக்கு வரமுன் பேசுவதற்கு கூட்டமைப்பு அழைத்தால் அரசு தயார்!- சுசில் பிரேமஜயந்த

“இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடாகத்தான் தீர்வைக்காண முடியும். எனவே, இந்தத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் பங்கேற்கவேண்டும். அதற்கு முன்னர் இரு தரப்புப் பேச்சுக்கு கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் அது தொடர்பில் அரசு பரிசீலிக்கத் தயாராகவுள்ளது.” – இவ்வாறு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

susil-peremajeyantha

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“உள்நாட்டுப் பிரச்சினைக்கு உள்நாட்டில்தான் தீர்வு கிடைக்கும். ஐ.நாவுக்குச் சென்று தீர்வைப் பெறமுடியாது. இந்தியாவுக்கு ஓடியும் தீர்வை வாங்கமுடியாது. தீர்வைப் பெறக்கூடிய இடம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுதான். எனவே, இந்தத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் பங்கேற்கவேண்டும்.

இதனைவிடுத்து அரசைக் குற்றம் சொல்வதில் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை. இரு தரப்புப் பேச்சு இழுபட்டுச் சென்றபடியால்தான் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷநியமித்தார். ஆனால், இதில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் முன்வரவில்லை. தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளகூடியவையல்ல.

எனவே, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் பங்கேற்கவேண்டும் தமிழருக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வருவதற்கு முன்னர் இரு தரப்புப் பேச்சுக்கு அழைப்பு விடுத்தால் அது தொடர்பில் அரசு பரிசீலிக்கத் தயாராகவுள்ளது. அரசு இந்த விடயத்தில் ஒருபோதும் பின்னிற்கமாட்டாது” – என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.