தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் எஸ்.ஜெபநேசனின் பவளவிழா நேற்று புதன்கிழமை மாலை யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி பீற்றோ மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.
ஆஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த பேராயரின் சகோதரன் அருட்பணி சு.மனோபவன் தலைமையில் அகவை வழிபாடு இடம்பெற்றது.
இதில் மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வண. கலாநிதி இராயப்பு யோசப் அருளுரை வழங்கினார். . தொடர்ந்து கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் வாழ்த்துரைகளை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளும் இலங்கைத் திருச்சபையின் குரு முதல்வர் வண. எஸ்.பி.நேசகுமாரும் வழங்கினர்.
பேராயரால் எழுதப்பட்ட ‘கண்டதும் கேட்டதும்’ என்ற நூலின் வெளியீட்டுரையை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா மேற்கொண்டார். நூலை மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியைச் சேர்ந்த வண. ஏ.எஸ். தேவகுணானந்தன் வெளியிட்டு வைக்க இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை எஸ்.சேனாதிராசா பெற்றுக்கொண்டார்.
விழாநாயகர் ஏற்புரையையும் நன்றியுரையையும் நல்கினார்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள், வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராயரின் மாணவர்கள், இலக்கிய அமைப்புக்களின் பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.