திருந்துங்கள் இல்லையெனில் திருத்தப்படுவீர்கள் – வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர்.

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து நடத்துனர்கள் நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்வதாக அண்மைக்காலமாக முறைப்பாடுகள் தொடர்பில் உரிய தரப்பினர் உடனடியாக உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா . டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார் .

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (28-11-2103) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் ,

பாமரமக்கள் போன்றவர்களை மேற்படி நடத்துனர்கள் மிகவும் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதாகவும் பெண் பயணிகளை அவர்களது உடலினை கண்டபடி தொட்டு பேருந்தினுள் தள்ளி ஏற்றி இறக்கி விடுவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது .

பேரூந்து தரிப்பிடம் இல்லாத இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதும் , பயணிகளை ஆடு மாடுகளைப் போல அதிகளவில் ஏற்றிச் செல்வதும் பயணிகளிடமிருந்து பயணத்திற்கான பணத்தினைப் பெற்றுக்கொண்டு பயணச் சீட்டுக்களை வழங்காமலும் பயணிகள் வழங்கும் பணத்திற்கு மீதியாக வரும் சிறு தொகை பணத்தினையும் மக்களுக்கு வழங்காமல் விடுவதும் . முதியவர்கள் , கர்ப்பிணித் தாய்மார்கள் , அங்கவீனமுற்றோர் மற்றும் மதகுருமார்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஆசனங்களை அவர்களுக்கு வழங்காது விடுவதும் அதிகரித்து வருவதாக நாளாந்தம் மக்களினால் முறைப்பாடுகள் தெரிவிக்கப் படுகின்றன .

இவை அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் வருகின்ற தை மாதமளவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் .

மேலும் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தனியார் பேரூந்து சங்க தலைவர்களும் சமாசத் தலைவர்களும் கூடிய கரிசனை எடுத்து மேற்ப்படி விடயங்களை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் .