Ad Widget

தாமதமின்றி தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவிப்பது அரசின் தலையாய கடமை!

“சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் தாமதமின்றி உடனே விடுவிப்பது அரசின் தலையாய கடமையாகும். அவ்வாறு விடுவித்தால்தான் எமது நாட்டில் எமது ஆட்சியாளர்களிடையே மனித உரிமையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கம் உண்டென்று உணரக் கூடியதாக இருக்கும்.”

– இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் அமர்வு, சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று நடைபெற்றது. இந்த அமர்வில் கலந்துகொண்டு, சர்வதேச மனித உரிமைகள் தினத்துக்கான விசேட உரையை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐ.நா. சபை இந்த ஆண்டு முற்பகுதியில் டிசெம்பர் 9ஆம் திகதியை இனப்படுகொலையில் பலியானோரை நினைவுறுத்தும் நாளாகப் பிரகடனப்படுத்தியிருந்தது. அன்றைய தினத்திலேயே இந்த உரையை எழுதினேன். அதனால் இனப்படுகொலையில் பலியானோரையும் நினைவில் இருத்தி இந்த உரையைத் தயார்படுத்தியுள்ளேன்.

ஐ.நா. ஆவணங்களில் அறிவிக்கப்பட்டிருக்கும் கோட்பாடுகள் இலங்கையைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானவை. அதுவும் தமிழ் மக்கள் இன்றுவரை அனுபவித்துவரும் அல்லல் அவலங்களுடன் மிகநெருங்கிய தொடர்புகள் கொண்டவை மேற்படி ஆவணங்கள். தொடர்ந்து வந்த இலங்கை அரசுகளினால் தமிழ் மக்களின் உரித்துக்கள் தனி மனிதரீதியிலும் நிர்ணயிக்கப்பட்ட மக்கட் கூட்டம் என்ற ரீதியிலும் காலாதிகாலமாக மீறப்பட்டு வந்துள்ளன.

குடியியல் மற்றும் அரசியல் உரித்துக்கள் சம்பந்தமான ஐ.நா சமவாய ஆவணத்தில் நிர்ணயிக்கப்பட்ட மக்கள் கூட்டங்கள் யாவற்றுக்கும் சுயநிர்ணய உரிமையானது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இந்த சுயநிர்ணய உரிமைதான் தமிழ் பேசும் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மிக முக்கிய மனித உரிமையான சமத்துவத்திற்கான உரித்து இலங்கை இயங்கத் தொடங்கிய காலம் முதல் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றது.

தனிப்பட்ட தமிழ் மக்களுக்கான உயிருக்கான உரித்து கூட அரசாலும் அதன் முகாமைகளாலும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளால் வழிநடத்தப்பட்டுள்ளன. நடந்த மனிதப் படுகொலைகளுக்கு இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை.

குடியியல் அரசியல் உரிமைகளுக்கான சமவாயத்தில் கூறப்பட்டிருக்கும் மாற்ற முடியாத உரித்துக்களாகிய சுதந்திரத்திற்கான உரித்து நூற்றுக்கணக்கிலான தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு இன்றும் மறுக்கப்பட்டு, அவர்கள் விளக்கமற்ற விளக்கமறியல்களிலும், விளப்பமற்ற விளக்கங்களிலும் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து அவர்களைச் சிறைப்படுத்தி வைத்தல் இலங்கை அரசு சுதந்திரத்திற்கான மனித உரிமையை மீறும் செயலாகும்.

ஆகவே, தாமதமின்றி தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவிப்பது அரசின் தலையாய கடமையாகும். அவ்வாறு விடுவித்தால்தான் எமது நாட்டில் எமது ஆட்சியாளர்களிடையே மனித உரிமையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கம் உண்டென்று உணரக் கூடியதாக இருக்கும்.

ஜனாதிபதி நாட்டின் நற்பெயர் கருதி நமது இளைஞர், யுவதிகளைப் பொது மன்னிப்பில் விரைவில் விடுவிப்பார் என்று எதிர்பார்க்கின்றேன்.

வடக்கு மாகாணசபையின் கடந்த பெப்ரவரி மாதத் தீர்மானமானது தொடர்ந்து நடைபெற்றுவரும் தமிழ் மக்களின் படுகொலைகள் இனப்படுகொலையே என்று அடையாளம் காட்டியது. அந்த இனப் படுகொலைகளின் சூத்திரதாரிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீதுவிளக்கம் நடாத்துவது இலங்கை அரசின் கடப்பாடு.

ஆனால், அரச தலைவர்களின் அண்மையகால அறிக்கைகள் முரண்பட்ட விதத்தில் அரங்கேறி வருகின்றன. இலங்கைபற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையின் அடிப்படையை அடியோடு மறுப்பனவாகவே அவை அமைந்துள்ளன.

தொடர்ந்து வந்த இலங்கை அரசுகள் மனித உரிமைகளைப் பேணாது தொடர்கதையாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளன. ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னர் கூட வெள்ளைவான் கடத்தல்கள் நடைபெற்றுள்ளன.

மனித உரிமைகளைப் பேணுபவர்கள் நாம் என்று இலங்கை அரச தரப்பினர் மார்தட்டிக் கூறுவதாகவிருந்தால் தமிழ் மக்களின் அவலங்களை நீக்கும் விதத்தில் அவர்களின் சுயநிர்ணய உரிமையை மதித்து அவ்வுரித்தின் அடிப்படையில் ஒரு நிரந்தரமான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும். அப்பொழுதுதான் சர்வதேச மனித உரிமைகள் தினம் இலங்கைக்குப் பொருந்தும் ஒருதினமாக ஏற்றுக் கொள்ளப்படலாம்” – என்றார்.

Related Posts