விசுவமடுவில் சிவில் பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரியாக இருந்த கேணல் ரத்னபிரிய பந்து இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நல்லிணக்கப் பொறிமுறைகளில் ஒன்றான, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தின் ஆணையாளர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (வியாழக்கிழமை) வழங்கிவைத்தார்.
தாரா விஜயதிலக, கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன், செல்லத்தம்பி சுமித்ரா, ஏ.ஏ.எம்.பதிஹூ, லெப்.கேணல் ரத்னபிரிய பந்து ஆகியோர் இழப்பீட்டுப் பணியகத்துக்கான ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைக்கமைய, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இவர்கள் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் மூலம் குறித்த பணியகத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் நோக்கில் உருவாக்கபட்ட இழப்பீட்டுப் பணியகத்திற்காக 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இழப்பீட்டு அலுவலகத்திற்கான சட்டமூலம் 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் திகதி அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.