Ad Widget

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் ஐ.நா தீர்மானத்தில் உள்ளடக்கப்படவில்லை

சமஸ்டி பெற்றுத் தருவோம் என்று மக்களிடம் ஆணை பெற்றவர்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் வெளியிடப்பட்ட பிரேரணையில், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற வாசகத்துடன் திருப்தியடைந்து மௌனமாக இருப்பது ஏன் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வியாழக்கிழமை (01) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால், ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரை, 16இல் இலங்கை அரசு தீர்வு விடயத்தில் அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற வாசகத்தை தவிர, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக வேறு எதையும் பரிந்துரை செய்யவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சனையை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்வோம் என்று கூறியவர்கள், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதே தமிழ் மக்களின் தீர்வாக அமையுமென்று சர்வதேசம் பரிந்துரை செய்யும்போது, ஏன் மௌனமாக இருக்கின்றார்கள் என்று புரியவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், இந்தியாவின் பிரதிநிதி உரையாற்றும் போது, 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று மேலும் அதனை செழுமைப்படுத்த வேண்டுமென்று கூறியிருந்தாலும் அந்த வார்த்தை பிரயோகம் பிரேரணையில் உள்வாங்கப்படவில்லை என தவராசா தெரிவித்தார்.

Related Posts