தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு ஆதரவு வழங்குவதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் தனது நேர்மையை வெளிக்காட்டுவதற்காக கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக் ஷ தெரிவித்தார்.

pasil-rajapaksha

தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை எந்த வழியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு எந்தவொரு உதவியையும் செய்யவில்லை. அரசியல் ரீதியாகவோ இராஜதந்திர ரீதியாகவோ கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு இதுவரை உதவியதில்லை. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குமென்று நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாக பரவலாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் பஷில் ராஜபக் ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆதரவை வழங்குவதன் மூலம் தமது நேர்மையை வெளிக்காட்டுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு சாதகமான ஒரு சிறந்த தீர்மானத்தை எடுக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

கடந்த காலம் முழுவதும் த.தே. கூட்டமைப்பு தவறான தீர்மானங்களையே எடுத்தது. ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுமே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு கூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். அந்த சந்தர்ப்பத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்க வரலாற்று ரீதியான வெற்றியை பெற்றுக்கொண்டார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994 ஆம் ஆண்டு தேர்தலில் அத்தனகெலயை விட வடக்கின் பல இடங்களில் கூடிய சதவீதங்களில் வாக்குகளை பெற்றிருந்தமை இங்கு விசேட தன்மை ஆகும். எனினும் அவ்வாறு வெற்றியீட்டிய சந்திரிக்கா அந்த ஆணையின் படி செயற்படாமல் போய்விட்டார். அந்த சந்தர்ப்பத்தை தவிர எந்த ஒரு தேர்தலிலும் த.தே. கூட்டமைப்பு ஜனாதிபதிகளுக்கு உதவி செய்ததில்லை.

கடந்த முறை முன்னாள் இராணுவ தளபதிக்கே அவர்கள் ஆதரவு வழங்கினர். எனவே எதிர்வரும் தேர்தலில் கடந்த காலங்களை போலவே தவறான தீர்மானங்களை எடுக்காமல் கூட்டமைப்பு தீர்க்க தரிசனமான தீர்மானம் ஒன்றை எடுக்குமென நம்புகின்றோம். குறைபாடுகள் எங்கும் இருக்கலாம். ஆனால் குறைபாடுகள் குறித்து பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. குறைபாடுகள் அவர்களிடத்திலும் இருக்கலாம். எம்மிடத்திலும் இருக்கலாம். அவற்றை விடுத்து எதிர்காலத்தை நோக்கி முன்செல்லுவதே முக்கியமானதாகும்.

அந்த வகையில் சிறந்த ஆரம்பம் ஒன்றுக்கு அடித்தளமிடுவதற்கு கூட்டமைப்பிற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் கூட்டமைப்பு ஒரு நல்ல செய்தியை விடுக்கலாம். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் கூட்டமைப்பின் கொள்கையில் மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு தான் கூட்டமைப்பினர் இதுவரை எவ்விதமான உதவிகளையும் செய்ததில்லை. அரசியல் ரீதியாகவோ இராஜதந்திர ரீதியாகவோ உதவியதில்லை. பாராளுமன்ற தெரிவு குழுவிற்கும் வரவில்லை. இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றவும் உதவி செய்யவில்லை. அபிவிருத்தியிலும் பங்கெடுக்கவில்லை.

யாழ்தேவி ரயில் சேவை ஆரம்ப நிகழ்விற்கும் வரவில்லை. வரலாறு இவ்வாறு தான் உள்ளது. எனவே இந்த சந்தர்ப்பத்தையாவது பயன்படுத்தி கூட்டமைப்பினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ விற்கு உதவி செய்ய வேண்டும். இந்த மகத்தான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூட்டமைப்பினர் தேசிய அரசியல் நீரோட்டத்தில் பங்கெடுத்து முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.

இம்முறை கூட்டமைப்பு தவறுகளை விடாமல் சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமென நாம் எதிர்பார்க்கிறோம். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் யதார்த்த பூர்வமான மற்றும் அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடியதுமான தீர்வு ஒன்றை கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளலாம். அந்த சந்தர்ப்பம் உருவாகுவதற்கு ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பினர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.