“தமிழ்த் தேசிய அவை’யானது தமிழ் தேசத்தினை பிரதிபலிக்கும் வகையில் அமைந்தால் அதில் பங்குபற்றுவோம், இல்லையெனில் அதில் பங்குபற்றுவதற்கு நாம் ஒருபோதும் தயாராக இல்லை” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர்கள், ‘ஒரு நாடு ஒரு தேசம்’ என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒருபடி இறங்கி வந்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘தமிழ் தேசிய அவை’ என்பது. தமிழ் தேசத்தினை பிரதிபலிக்கும் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி சிவில் சமூகத்தினையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். அந்த அவை அமைகின்ற பொழுது, தேசத்தின் ஒரு வகையான நாடாளுமன்றமாக அமையலாமே தவிர, தமிழ்த் தேசத்தினை கைவிட்டு வேறு திசைக்கு செல்லும் அவையாக இருக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘தமிழ் தேசிய அவை’ தமிழ்த் தேசத்தின் பிரதிப்பலிப்பாக அமையலாமே தவிர வேறு எந்த அடிப்படையிலாவது அந்த அவையை அமைப்பதாக இருந்தால், அந்த அவையில் நாங்கள் பங்குபற்றுவதற்கு தயார் இல்லை. ‘தமிழ்த் தேசம்’ என்ற அடிப்படையில் மட்டும் தான் நாங்கள் இந்த அமைப்புக்குள் வரத்தயாராக இருக்கின்றோம் என்பதனை தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றோம்.
தமிழ் தேசத்தின் தனித்துவத்தினையும், இறைமை, சுயநிர்ணயம் விட்டுக் கொடுப்பதற்காக தமிழ் தேசிய அவை அமைகின்றது என்றால், அந்த அவைக்குள் வர நாம் தயாரில்லை என்பதனையும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் தேத்தின் அவையை உருவாக்குவதன் மூலம், தழிழ் தேசத்தின் இறைமை, சுயநிர்ணயம், ஆகியவற்றை முன்னேற்றுவதற்கு காரணமாக வேண்டும் என்பதனை தெளிவாக கூறுகின்றோம்.
பொது வேலைத்திட்டங்கள் கூட்டாக வேலை செய்ய வேண்டும். ஒரு புரிந்துணர்வு இல்லாது வேலை செய்வதனால் எவ்விதமான பியோசனமும் இல்லை. முயற்சிகள் வீணாக போவதாக இருக்க கூடாது. ஆகவே, 13 ஆம் திருத்தத்திற்கான பாதைக்குள் சென்று முடங்கிக் கொள்வதை நாங்கள் ஒருநாளும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
இந்த முயற்சிகள் வெறுமனே பூச்சியத்திற்கு கொண்டு வருவதற்கும், திரும்பவும் அதே முயற்சியில் நாளை சிங்கள அரசு செய்யக்கூடிய நிலைமைக்கு கொண்டு வந்து விட்டு விடும். பொது போராட்டங்களாக இருக்கலாம், மக்களின் அணி திரட்டள்களாக இருக்கலாம். மக்களை அரசியல் மயப்படுத்தும் வேலைத்திட்டமாக இருக்கலாம்.
தமிழ் தேசிய அவையை உருவாக்கும் திட்டமாக இருக்கலாம். தமிழ் தேசத்தின் அங்கிகாரம் மற்றும் தனித்துவமான இறைமையாக இருக்கலாம், தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை கைவிடும் எந்த செயற்பாட்டிற்கும் இணங்கத்தயார் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், அதிகார பகிர்வு, மற்றும் அரசியல் தீர்வு என்ற பாதைக்குள் நாங்கள் செல்ல முடியாதென்பதனையும் தெட்டத் தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகின்றோம். தமிழ் தேசிய அவையை உருவாக்கினால் தமிழ் தேசத்தை அங்கிகரிக்கும் வகையில் இருக்க வேண்டுமே தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் அதனை உருவாக்குவதில் எவ்விதமான பிரயோசனம் இல்லை என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.