Ad Widget

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விசேட கவனயீர்ப்பு மசோதா

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார, புனர்வாழ்வு அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களினால் நேற்று மாகான சபையில் சமர்பிக்கப்பட்ட விசேட கவனயீர்ப்பு மசோதா கீழே தரப்பட்டுள்ளது.

வைத்தியகலாநிதி.பத்மநாதன் சத்தியலிங்கம்,
சுகாதார அமைச்சர்,
வடக்கு மாகாணம்.
05.11.2015

கௌரவ அவைத்தலைவர் அவர்களுக்கு,
வடக்கு மாகாண சபை.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விசேட பிரேரணை

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக காலத்தின் தேவையறிந்து விசேட பிரேரணையொன்றை இந்த உயரிய சபையில் முன்மொழிய வினைகின்றேன்.

2009ல் யுத்தம் முடிவுக்கு கொண்டவரப்பட்டபோதும் மக்களுக்கான அடிப்படை பிரச்சனைகள் பலவும் இதுவரை தீர்க்கப்படாத நிலையிலேயே உள்ளமை வேதனைக்குரிய விடயமாகும். இவற்றுள் நீண்டகாலமாக சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சனையானது அவசரமானதும், அவசியமானதுமான பிரச்சனையாகும்.

பொதுவாக நாடுகளில் அரசியல் உரிமைக்கான போராட்டங்கள் நடைபெற்று அவை பேச்சுவார்த்தைமூலமோ அன்றி போரின்மூலமோ முடிவடைந்த நிலையில் அரசியல் கிளர்ச்சியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து அவர்களை விடுதலை செய்வது உலகமரபாகும். எனினும் எமது நாட்டில் நடைபெற்ற தமிழ்மக்களால் முன்னெடுக்கப்பட்ட அரசியல்போராட்டத்தின் பின்னர் இவ்வாறான நடைமுறை பினபற்றப்படவில்லை. குறிப்பாக 1970 மற்றும் 80 களில் தென்னிலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் முடிவுக்குகொண்டுவரப்பட்ட பின்னர் அதில் ஈடுபட்டவர்களுக்கு நிபந்தனைகள் எதுவுமின்றி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் இவ்வாறான நடைமுறை தமிழ் அரசியல் கைதிகளுக்கு மட்டும் வழங்கப்பட்வில்லை.

2009 யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னரும் அதன்பின்னரும் விடுதலை போராட்டத்திற்கு உதவினார்கள் அல்லது அதில் நேரடியாக ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைதுசெய்யப்ட்டவர்கள் தொடர்ந்தும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று வகையினர் அடங்குகின்றனர்.

01. சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விசரணைகள் எதுவுமின்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர்.
02. வழக்குத்தாக்கல் செய்யப்பட்டும் தீர்ப்புகள் இதுவரை வழங்கப்படாது தடுத்துவைக்கப்பட்டுள்ளோர்.
03. சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் குற்றமிழைத்தவர்களாக தீர்ப்பு வழங்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர்

தற்போது ஆயுதப்போராட்டம் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறானதொரு சூழ்நிலை மீண்டும் உருவாவதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றும் அரசாங்கம் கூறிவரும் நிலையில் இவ்வாறாக தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பதானது எந்தவகையிலும் நியாயமாகாது. குறிப்பாக போரிற்கு பின்னரான சூழ்நிலையில் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குடும்பத்தலைவர்களின் மனைவி, பிள்ளைகள் துணையேதுமின்றி , வருமானமின்றி அன்றாட வாழ்க்கையையும் பிள்ளைகளின் கல்வியையும் கொண்டுசெல்வதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர்.

கடந்த சனவரியில் இலங்கையில் புதிய அரசொன்று அமைக்கப்படுவதற்கு பிரதான காரணகர்த்தாக்களாக இருந்த தமிழ் மக்கள் புதிய ஆட்சியில் தமக்கான அரசியல் விமோசனம் கிட்டுமென்ற நம்பிக்கையிலேயே பெருவாரியான வாக்குகளை நல்லாட்சி அரசுக்கு வழங்கியிருந்தனர். இந்தநிலையில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அரியாசனத்தில் அமர்ந்த புதிய நல்லாட்சி அரசானது ஆகக்குறைந்தது இவ்வாறாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகள் எதுவுமின்றி பொதுமன்னிப்பை வழங்கி உடனடியாக விடுதலை செய்து தனது நல்லிணக்க சமிஞ்சையை தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும். இதன்மூலம்தான் தென்னிலங்கை அரசின்மீது நம்பிக்கையிழந்த தமிழ்சமூகத்திற்கு புதிய நல்லாட்சி அரசில்; நம்பிக்கை ஏற்பட வாய்ப்பு ஏற்படுவதுடன் அரசியல் தீர்வைநோக்கிய நீண்ட பயணத்திற்கான அத்திவாரமாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.

இந்த உயரிய மக்கள் சபையினூடாக இந்த பிரேரணையை தயவுடன் முன்வைப்பதோடு சபையினரின் ஆதரவை கோரிநிற்கின்றேன்.

நன்றி,

வைத்தியகலாநிதி.பத்மநாதன் சத்தியலிங்கம்,
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்

Related Posts