தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சுற்றி வளைத்து இராணுவம் தாக்குதல்:

எழுதுமட்டுவாழ் மருதங்குளம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவருடைய வாகனம் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் காலையில் இருந்து தென்மராட்சிப் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை சீருடையினர் பின்தொடர்ந்துள்ளதுடன் அச்சுறுத்தியும் வந்துள்ளனர்.

எனினும் தற்போது எழுதுமட்டுவாழ் பகுதியில் பிரசாரதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளை மருதங்குளம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் வைத்து சீருடையினர் ஆதரவாளர்களை மிரட்டியுள்ளனர்.இதனயடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சஜந்தன் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு நின்ற இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்களை அங்கிருந்து செல்லுமாறும் கூறியிருந்தார்.

எனினும் தாம் வழமையான ரோந்து பணியில் ஈடுபடுவதாக கூறிவிட்டு சம்பவ இடத்திலேயே நின்றுள்ளனர்.பின்னர் கொடிகாமம் பொலிஸாரிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. எனினும் அவ்விடத்திலேயே நின்ற இராணுவத்தினர் குறித்த வேட்பாளரின் வாகனத்தை தாக்கிவிட்டு அருகில் இருந்த இராணுவ முகாமுக்குள் தப்பிச் சென்றுள்ளனர்.

இராணுவத்தினரின் துவிச்சக்கர வண்டிகள் இரண்டினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தற்போது குறித்த பிரதேசத்தில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் குறித்து வேட்பாளர் சஜந்தனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

இன்று காலையில் இருந்து எனது ஆதரவாளர்களை இராணுவத்தினர் பின்தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளனர். எழுதுமட்டுவாழ் பகுதியில் எனது வானத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றனர்.

அதனை அவதானித்த ஆதரவாளர்கள் அவர்களை துரத்திச் சென்றனர். எனினும் அவர்கள் அருகில் உள்ள முகாமிற்குள் தப்பிக் கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் தொடர்ந்தும் நாம் செல்வதற்கு எமக்குப் பாதுகாப்பு வழங்காமல் சம்பவ இடத்திலேயே தரித்து நின்றமை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
என்றார்.