Ad Widget

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் நிராகரிப்புக்கு தமிழரசுக்கட்சி காரணம்?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்ய வலியுறுத்தி கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு பகிரங்க வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ்.க.பிரேமச்சந்திரன் ஆகியோர் கைச்சாத்திட்ட கடிதமொன்று இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தின் முழு விபரம் வருமாறு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பொதுவான யாப்பின் அடிப்படையிலான கட்டமைக்கப்பட்ட கட்சியாகப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி நீண்டகாலமாக உள்ளார்ந்த கருத்தாடல்களை முன்னர் அதன் அங்கத்துவக் கட்சிகளாக இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்), தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(ரெலோ) ஆகியன தங்களுடன் மேற்கொண்டு வந்தமையை நீங்கள் அறிவீர்கள். இதனடிப்படையிலேயே 2011 ஆம்

 ஆண்டு தை மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டமையும் தாங்கள் அறிந்ததே.இப்பதிவிற்காகத் தேர்தல் ஆணையகம் அங்கத்துவக் கட்சிகளின் ஒப்புதல் கடிதத்தைக் கோரியிருந்தமையும் பதினைந்து மாதங்களாகத் தமிழரசுக்கட்சி அத்தகைய ஒப்புதல் கடிதத்தினை வழங்க தாமதம் செய்ததால் பதிவிற்கான விண்ணப்பம் 2012ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டமையும் தங்களுக்குத் தெரிந்ததே.எனவே பதிவுத்தொடர்பான கருத்தாடல்கள் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முந்தைய அண்மைய விடயமல்ல என்பதைத் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றோம். தமிழ் மக்களை அதிகபட்சம் ஒற்றுமைப்படுத்தி இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு தலைமையின்கீழ் கொண்டுவர வேண்டிய தேவை புலிகளின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் பல மடங்கு அவசியமாகின்றது என்பதையும் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்.புலிகளுக்குப் பின்னர் காத்திரமான தலைமை எமக்கு இருக்கின்றதா என்று விரக்தியடைந்த மக்களின் எதிர்காலம் குறித்த சந்தேகத்தைப் போக்கி, அவர்களுக்கு நம்பிக்கையை வளர்த்து உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீது சுமத்தப்பட்டது. அவ்வாறான ஒரு கூட்டமைப்பு அதற்குப் பொருத்தமான கட்டமைப்புக்களுடன் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாக இருந்தால் மட்டுமே எமது மக்களின் பூரண நம்பிக்கையை பெறவும் சர்வதேசத்துடனான முறையான தொடர்பாடல்களை பேணவும் வளர்த்தெடுக்கவும் முடியும்;. மேலும், எமக்குப் பொருத்தமான தீர்வைநோக்கி செயலாற்றவும் ஏதுவாக இருக்கும்.ஆனால் நாம் கூட்டமைப்பாகச் செயற்படத் தொடங்கி பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், இதுவரை அவ்வாறான ஒருவடிவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை என்பதே யதார்த்தமானது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அதற்கான கட்டமைப்புக்களுடன் கூடிய ஓர் அரசியல் கட்சியாகப் பரிணமித்திருக்குமாயின், நாம் இப்பொழுது முகங்கொடுக்கின்ற பல்வேறு விமர்சனங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.கடந்த ஆனி மாதம் 28ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ரி.யு.எல்.எவ், புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகள் ஒன்றுகூடி கூட்டமைப்பைப் பதிவுசெய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தோம். அதன் பிரகாரம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொள்வதற்கு நீங்கள் ஏற்றுக்கொண்டீர்களே தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது தொடர்பில் எதிர்மறையான பதிலையே எம்மால் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது.இந்தச் சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பைப் பதிவு செய்வதில் சட்டபூர்வமான சிக்கல் இருக்கும் என எமக்குத் தெரிவிக்கப்பட்டபோது பதிவு செய்வதில் தடைகள் இருக்குமென்றால், ஒரு கட்சி தன்னுடைய பெயரையும் யாப்பையும் மாற்றியமைப்பதினூடாக கூட்டமைப்பைப் பதிவு செய்யலாம் என்றும் இதற்கு எந்த ஒரு கட்சியும் முன்வராத பட்சத்தில், ஈ.பி.ஆர்.எல்.எவ் தனது பெயரை மாற்றியமைக்க தனது கட்சியின் அனுமதியைப் பெற்றுத்தரத் தயாராக இருந்ததாக திரு.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார் என்பதை இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றோம். அதுமட்டுமன்றி, தமிழ் மக்களின் நன்மைகருதி நாம் அனைவரும் ஒரே கட்சியாக செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதையும் வலியுறுத்துகின்றோம்.இப்பொழுது கிழக்கு மாகாணத் தேர்தல் முடிந்துவிட்டமையினால் கட்சியாகப் பதிவு செய்யும் வேலையை விரைவாகச் செய்து முடிக்க முடியும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளாகிய நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எதிரானவர்கள் அல்லர். பேச்சுவார்த்தைகளைக் குழப்புபவர்களும் அல்லர். இன்னும் சொல்லப்போனால், தமிழ் மக்களுக்கு சகல அதிகாரங்களும் அடங்கிய கௌரவமான ஒரு அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் ஐக்கியப்பட்டிருக்கின்றோம்.கூட்டமைப்பைப் பதிவு செய்து உறுதியான கட்சியகாகக் கட்டியெழுப்பும் எமது நோக்கமானது முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்ததே தவிர, எந்தவொரு தனிநபர் நலனையோ, கட்சி நலனையோ முன்னிலைப்படுத்தியது அல்ல. நாம் ஒரே கட்சியாகச் செயற்படுதல் என்பது எமது அரசியல் எதிரியான இனவாத அரசிற்கு அச்சமூட்டுவதாக இருக்குமே தவிர, மகிழ்ச்சியூட்டுவதாக இருக்காத. கூட்டமைப்பானது ஒரு கட்டமைப்பற்ற ஒரு ஸ்தாபனமாக இருந்தபோதும் நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராகவே இருந்தபோதும் உங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் தமிழ் மக்களின் தலைவராகவும் கருதியே நாம் செயற்பட்டு வருகின்றோம்;. அதேவேளை, கூட்டமைப்பிற்கான பொருத்தமான வலுவான ஒரு கட்டமைப்பு உங்கள் மூலம் உருவாகும் என நாம் எதிர்பார்த்தோம். ஆனால் ஆண்டுகள் உருண்டோடியும் அது நடைபெறவில்லை என்பது எமக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது.நடந்து முடிந்த யுத்தமானது எமது மக்களை எவ்வளவு மோசமாகச் சீரழித்துள்ளது என்பதைச் சொல்லித்தெரியவேண்டியதில்லை. யுத்தத்தில் நொந்துபோன மக்கள் பல்வேறுவிதமான உதவிகளை கூட்டமைப்பினராகிய எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவற்றைச் செவ்வனே செய்வதற்குரிய பொறிமுறை எம்மிடம் இல்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.ஆகவே தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதாயினும் சரி, நொந்துபோன மக்களுக்கு உதவுவதானாலும் சரி எமக்கு ஒரு வலுவான அரசியல் ஸ்தாபனம் தேவை என்பதைத் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நாங்கள் திடமாக நம்புகின்றோம். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கான ஒரு யாப்பு உட்பட அதற்கான சட்டபூர்வமான ஆவணங்களையும் நாம் தயாரித்து வருகின்றோம். தமிழரசுக் கட்சி உட்பட நாம் அனைவரும் இணைந்து இதனை விரைவாகப் பதிவு செய்யலாம் என்று எதிர்பார்க்கின்றோம். இது தொடர்பாக உங்களுடன் கலந்துரையாட பொருத்தமான நேரத்தைக் கூடியவிரைவில் ஒதுக்குவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

Related Posts