தமிழ்க் கூட்டமைப்பினரின் அலுவலகம் மீது தாக்குதல், ஆவரங்காலில் வியாழன் இரவு சம்பவம்

tnaஆவரங்காலில் செயற்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு விசமிகளால் சேதமாக்கப்பட்டதுடன் அரச தரப்பு வேட்பாளர்களின் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

அத்துடன் அங்கு பறந்து கொண்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொடியும் கிழித்தெறியப்பட்டுள்ளது. ஆவரங்கால் சிவன் கோயிலுக்கு அண்மையில் பிரதான வீதியோரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான இல்லத்தில் நீண்டகாலமாக இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகம் செயற்பட்டுவந்தது.

மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகமாகவும் அது செயற்பட்டது. இந்த அலுவலகம் நேற்று முன்தினம் வியாழன் இரவு இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டதுடன் அலுவலகத்துக்கு உள்ளே அரச தரப்பு வேட்பாளர்களின் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் பெருமளவில் வீசப்பட்டுள்ளன. அத்துடன் அங்கிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் அரியகுட்டி பரஞ்சோதியின் பெரிய அளவிலான பனரும் சேதமாக்கப்பட்டு வெளியே வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்தினால் தேர்தல் ஆணையாளர் மற்றும் யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. –