தமிழ் மொழியில் வாக்குமூலங்களைப் பதிவு செய்யத் தவறும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக பொதுமக்கள் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யலாம் எனவும் அந்த உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வடமாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி க.தியாகராஜா இன்று தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ‘வட மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளையும், வாக்குமூலங்களையும் தமிழ்மொழியில் பதிவு செய்வதற்கான உரிமை உண்டு.
அந்த உரிமையின் பிரகாரம், பொலிஸ் நிலையங்களிலுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வாக்குமூலத்தினை தமிழில் பதிவு செய்வதற்கு மறுப்புத் தெரிவித்தால், மறுப்புத் தெரிவித்த அந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் பெயர், திகதி, முறைப்பாடு பதிவு செய்யச் சென்ற நேரம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு வடமாகாண பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறு’ பணிப்பாளர் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன வடபகுதியிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ் மக்களின் முறைப்பாடுகளும், வாக்குமூலங்களும் தமிழ் மொழியில் பதிவு செய்யுமாறு வடமாகாண பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.