தமிழர் பிரதேசங்களில் தொடர்ந்தும் இராணுவம் நிலை கொண்டிருப்பது ஆபத்து என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டபின் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
“தற்போது எங்குமே யுத்தம் நடைபெறவில்லை என்பதால் இராணுவத்தின் பிரசன்னம் வடபகுதிகளில் தேவையில்லை. குறிப்பாக தமிழர் தாயகப் பிரதேசங்களில் இராணுவம் தேவையில்லை.
இராணுவத்தின் தேவைகளுக்கு காணிகள் தேவையில்லை. அவர்களுக்கு சம்பளம் கிடைக்கின்றது. காணிகள் தேவை எனில் முகாம்கள் மட்டுமே போதும். எனவே மக்களது காணிகளை அவர்களுக்கு வழங்காது இருக்கின்றமை கொடுமையான விடயம்.
அதைவிட மேலும் கொடுமையான விடயம் இவ்விடயங்களை எமது தமிழ்த் தலைவர்கள் பார்த்துக் கொண்டிருப்பது தான். ஆகவே விரைந்து அரசாங்கம் இக்காணிகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.