தமிழர் நலன்காக்க கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார்! ஐதேக முதன்மை வேட்பாளர் துவாரகேஸ்வரன்

thuvareswara-makesswaran-UNPதமிழ் மக்களின் நலன்காத்து அவர்களின் உரிமைகளை ஜனநாயக ரீதியில் வென்றெடுத்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதே எனது எதிர்பார்ப்பு. அதனை நிறைவேற்றுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்குத் தயார் என வட மாகாணத்துக்கான ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்டபாளர் துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண மக்கள் இந்தத் தேர்தலில் தமது வாக்குரிமையைக் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும். இல்லையேல் அது அரசாங்கத்தின் அடிவருடிகளாக சுயநல அரசியல் புரிவோருக்கு சாதகமாக அமைந்துவிடும் எனவும் தெரிவித்தார்.

வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கொழும்பிலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறும் நான், எமது மக்களின் நலன் காக்கும் காவலனாகவே செயற்படுவேன். ஒருபோதும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு துணைபோகவோ அல்லது முன்நிற்கவோ மாட்டேன். மாறாக அவ்வாறான செயற்பாட்டிற்கும் செயற்பாட்டாளர்களுக்கும் எதிராகத் துணிந்து குரல் கொடுப்பேன்.

தமிழ் மக்களின் நிரந்தர சமாதானத்துக்காகவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் தமிழ் கூட்டமைப்பு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக செயற்படாமல் நிரந்தர சமாதானத்துக்காக அவர்களுடன் இணைந்து செயற்படத் தயாராகவே உள்ளேன்.

எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் வடமாகாண வாக்காளர்கள் அனைவரும் தமது வாக்குரிமையை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தாலும் சரி, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தாலும் சரி அல்லது நீங்கள் விரும்பும் வேறு கட்சிகளுக்கு வாக்களித்தாலும் சரி ஆனால் அக்கட்சிகளில் உள்ள செயற்திறன் மிக்க சிறந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.