Ad Widget

தமிழர்களுடைய பிரச்சினையை தீர்க்க யாரும் முன்வரவில்லை- இராயப்பு யோசப் ஆண்டகை

30வருடப் போராட்டத்திற்கான பிரச்சினையைத் தீர்க்க யாரும் முன்வரவில்லை என மன்னார் ஆயர் வண. இராயப்பு யோசப் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.

mannar-ayar

புனித பாப்பரசரின் வருகையை அரசியலாக்கப்பார்க்கிறார்கள். உலக சமயத்தலைவரொருவரின் விஜயத்தை அரசியலாக்க யாரும் அனுமதிக்கமுடியாது. ஜரோப்பிய ஒன்றியம் புலித்தடையை நீக்கியதற்கு நான்தான் காரணமென ஒரு இணையத்தளம் செய்தியை வெளியிட்டுள்ளது.

எனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும்இல்லை. நான் அதுபற்றி கனவில்கூட நினைக்கவில்லை. அங்கு இது தொடர்பாக வழக்கு வைத்தது கூட எனக்குத் தெரியாது. வெறும் ஊகத்தில் எழுதுகிறார்கள். இவை இன்னுமின்னும் இடைவெளியை அதிகரிக்கத்தான் உதவுமே தவிர பிரச்சினைகளைத் தீர்க்க ஒருபோதும் உதவாது.

நல்ல சிந்தனைகள் செயற்பாடுகள்எப்போதும் நன்மையில் முடியும். அதற்கு இறைவன் பக்கபலமாக இருப்பான். முதலிலே இலங்கையில் புரையோடிப்போயுள்ள தமிழர் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நமது நாட்டில் இடம்பெற்ற கொடூர யுத்தத்தின்பின்னர் எமது மக்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளது. போரிலே 19ஆயிரம் பேரைக்காணவில்லை என ஒரு அறிக்கை கூறுகின்றது. அவர்களில் பெரும்பாலானானோர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களே என்று கூறப்படுகிறது.

அதைவிட கணவனை இழந்த மற்றும் பிள்ளைகளை இழந்த குடும்பங்கள் ஏராளம். அவர்களுக்கு புனர்வாழ்வளித்து சொந்தக்காலில் வாழும்பொருட்டு வழியைக்காட்டவேண்டியது எமது தலையாய கடமையாகும்.

வீதிகளும் பாலங்களும் புகையிரதமும் அவசியம்தான். அதேவேளை வயிற்றுப்பசியைபபோக்கி சுதந்திரமாக நிம்மதியாக கௌரவமாக வாழ வகை செய்யவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இறுதியுத்தத்தை நேரடியாக அனுபவித்தவர்கள் இன்னும் அதிலிருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனர். அவர்கள் இன்னமும் கவலையுடன் நடைபிணமாக அலைகிறார்கள். அவர்கள் மனங்களைக்கட்டியெழுப்ப வேண்டும்.

30வருடப் போராட்டத்திற்கான பிரச்சினையைத் தீர்க்க யாரும் முன்வருகிறார்களில்லையே. சுயநல அரசியல்வாதிகளே அதிகமுள்ளனர். தேசிய பொது அரசியல்வாதிகளாக எவரும் இல்லை.

மகாத்மாகாந்தி, நெல்சன்மண்டேலா, ஆபிரஹாம் லிங்கன் போன்ற தேசியவாதிகள் நம்மத்தியில் வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சுயநலத்திற்காக இயங்கும் அரசியால்வாதிகளை நாம் உருவாக்கிவிட்டிருக்கிறோம்.

எனவே அரசியல் யதார்த்தத்தை தெற்கிலுள்ள சிங்கள மக்களுக்கு எடுத்தியம்பி பொதுவாக மக்களைத் தயார்படுத்த வேண்டும். அதுவே நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts