நீண்டகாலம் நீடித்துக்கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக தீர்வைக் காண்பதற்கு நாம் பொறுப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்மைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டேபன் டையோனிடத்தில் தெரிவித்துள்ளார்.
எமது அடிப்படை அபிலாஷைகளை அடையக்கூடிய வகையில் அரசியல் சாசனம் உருவாக்கப்படுமாகவிருந்தால் எமது மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனவும் அவரிடத்தில் சுட்டிக்காட்டிய எதிர்கட்சித்தலைவர் கனடா இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான உந்துதலை வழங்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டேபன் டையோன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்கட்சித்தலைவர் அலுவலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார்.
இச்சந்திப்பு குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடுகையில்,
கனேடிய வெளிவிவகார அமைச்சருக்கும் எதிர்க்கட்சித்தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பில் நீண்ட கலந்துரையாடலொன்றை இடம்பெற்றது. . பல வருடங்களின் பின்னர் கடனாவின் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்றார்.
தமிழ் மக்களுடைய நலனிலே விசேடமான அக்கறையைச் செலுத்தி இலங்கைக்கு உதவியாக பலவிதமான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சர் செயற்பட்டு வருகின்றார்.
தற்போது நடைபெற்றுவருக்கின்ற பொறுப்புக்கூறல், நல்லிணக்கச் செயற்பாடுகள், எமது மக்களுடைய தேவைகள் தொடர்பாக தீர்க்கமாக கேட்டறிந்துகொண்டார்.
விசேடமாக புதிய அரசியல் சாசன உருவாக்கம் தொடர்பான நிலைமைகளை எம்மிடத்தில் கேட்டறிந்து கொண்டார். அத்தோடு நீண்டகாலம் நீடித்துக்கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சனைக்கு புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியம் தொடர்பாகவும் எம்முடன் ஆராய்ந்தார்.
இந்த நாட்டின் தேசிய இனமாகவிருக்கும் தமிழ் மக்களுக்கு சமத்துவம் வழங்குகின்ற வகையிலும் முழுமையாக அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டால் இதுவரைகாலமும் இருக்கும் தேசிய இனப்பிரச்சைக்கு நிரந்தர தீர்வாக அமையும். அதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
அந்த செயற்திட்டத்தில் நாம் பொறுப்புடன் ஈடுபட்டிருக்கின்றோம் என்பதை எதிர்க்கட்சித்தலைவர் கனேடிய வெளிவிவகார அமைச்சரிடத்தில் விரிவாக எடுத்துரைத்துள்ளார். எமது அடிப்படை அபிலாஷைகளை அடையக்கூடிய வகையிலேயே அரசியல் சாசனம் உருவாக்கப்படுமாகவிருந்தால் எமது மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதன் மூலமாக நாம் முன்னேற்றப்பாதையில் செல்லமுடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது எனவும் எதிர்க்கட்சித்தலைவர் அவரிடத்தில் கூறினார்.
இவ்வாறான அனைத்து செயற்பாடுகளிலும் இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான உந்துதலை கனடா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை, தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுக் கருத்திட்டத்தில் இலங்கைக்கும் கனாடவிற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக கருத்து தெரிவித்த சுமந்திரன் , இந்த ஒப்பந்தம் அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இருப்பினும் அது வரவேற்றகத்தக்கவொருவிடயம் என்றார்.