தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சிலரே சூழ்ச்சி செய்தனர்: சுரேஸ்

SURESH‘வல்வெட்டித்துறையில் குலநாயகம் தலைமையிலும் வலிகாமம் கிழக்கில் ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து தமிழரசுக் கட்சியின் சிலரே வரவு – செலவுத் திட்டத்தினை தோற்கடித்தனர்’ என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கலந்துரையாடல் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றுவருகின்றது.

அதில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் பங்கேற்றார். கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வரவு – செலவுத்திட்ட தோல்விகள் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘வடக்கிலும் கிழக்கிலுமாக இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன. முக்கியமாக வரவு செலவுத்திட்டத்தில் குறைபாடுகள் உள்ளதாக தெரிவிக்கவில்லை. மாறாக தாம் தவிசாளராக வரவேண்டும். உதவி தவிசாளராக வரவேண்டும் என்ற நோக்கமே வரவு-செலவுத்திட்ட தோல்விக்கு காரணமாக உள்ளது. இதனை தவிர வேறு எந்த குற்றச்சட்டுக்களும் இருப்பதாக தெரியவில்லை.

அவ்வாறு குற்றச்சாட்டுக்கள் வரும் போது கட்சி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இடம்பெற்றதாக தெரியவில்லை. அவ்வாறு குற்றச்சாட்டுக்கள் வந்தால் கட்சி நடவடிக்கை எடுத்து அவர்களை கட்சியை விட்டு விலத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் கட்சியின் தலைமைப்பீடம் கூறியதன் பின்னரும் கூட குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகரசபை என்பவற்றில் பிரதிநிதிகளுடன் நானும் மாவை சேனாதிராஜா, சி.வி.கே. சிவஞானம் போன்றோர் கலந்துரையாடி வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க கூடாது என தெரிவித்தும் அங்கு மாறான வாக்களிப்பு இடம்பெற்றிருக்கின்றது.

வல்வெட்டித்துறையில் குலநாயகம் தலைமையிலும் வலிகாமம் கிழக்கில் ஈ.பி.டி.பியுடன் இணைந்து தமிழரசுக்கட்சியினர் சிலர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுகின்றர். எனவே இவர்களுக்கு கூட்டமைப்பை பலப்படுத்தி ஒற்றுமையாக கொண்டு செல்லும் நோக்கமல்ல.

மாறாக தமது சுயநல நோக்கத்திற்காக தற்போதுள்ள தவிசாளர்களை தோற்கடித்து தாம் தவிசாளராக வரவேண்டும் நோக்கமே உள்ளது. இது மிக மிக மோசமான நடவடிக்கை. எனவே தமிழரசுக் கட்சியினுடைய செயலாளர் நாயகமாக உள்ள மாவை சேனாதிராஜாதான் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Related Posts