தனியார் – இ.போ.ச பிரச்சினைகளை தீர்க்க குழு

வடபிராந்திய இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் தனியார் போக்குவரத்து சபைக்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

meeting

யாழ். மாவட்ட அரச அதிபர் செயலகத்தில் வடபிராந்திய இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்து சேவை பிரதிநிதிகளுக்குமிடையே கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் நேற்றைய தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போது இரு தரப்பிற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், ‘வட பிராந்திய இலங்கை போக்குவரத்துச் சபை, தனியார் பேரூந்து ஆகியவற்றின் சாரதிகளோ நடத்துனர்களோ தவறிழைக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என பொலிஸாரிடம் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், இரு தரப்பினரும் தம்மிடையே எழும் பிரச்சினைகள் குறித்தான வார்த்தைப் பிரயோகங்களின் போது மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட அமைச்சர், எதிர்காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் நிகழாதபடி உரியமுறையில் தீர்வு காணும் வகையில் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காணும் பொருட்டு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இருதரப்பு பிரதிநிதிகளுடன் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் றொஹான் டயஸ், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பிரதிநிதிகள், அமைச்சரின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி.குகேந்திரன் உள்ளடங்கிய குழுவொன்றை அமைச்சர் நியமித்தார்.

இக்குழுவானது மாதம் தோறும் கலந்துரையாட வேண்டுமென்பதுடன் தேவையேற்படும் பட்சத்தில் அவசரக் கூட்டத்தை நடத்தலாம் எனவும் தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் 10ஆம் திகதி இக்குழுவின் முதலாவது கூட்டம் நடைபெறும்போது நேர அட்டவணை தொடர்பில் விரிவாக கலந்துரையாடி உரிய தீர்மானத்தை எட்ட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தின் போது வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான பிரதி பொது முகாமையாளர் அஸ்ஹர், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.