கோரோனா தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதில் ஈடுபட்டுள்ள சுகாதார அதிகாரிகள், பொலிஸார் மற்றும் படையினர் கோரும் போது, தனிப்பட்ட தகவல்களை வழங்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று பொது மக்களிடம் பொலிஸ் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் தொற்று நோய்களைத் தடுக்கும் சட்டத்திற்கும் கட்டுப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் போது அல்லது வீடுகளை விட்டு வெளியேறும்போது பெயர், முகவரி, தொடர்பு விவரங்கள் மற்றும் தேசிய அடையாள எண் ஆகியவற்றை எழுதிய ஒரு துண்டுத் தாளை எப்போதும் வைத்திருக்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
படிவங்களை நிரப்புவதை விட இதுபோன்ற ஒரு முறையைச் சேர்ப்பது மிகவும் திறமையானதாக இருக்கும் என்று பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
கோவிட் -19 நோயாளிகள் மற்றும் பி.சி.ஆர் சோதனைகளுக்கான மாதிரிகளை வழங்க அறிவுறுத்தப்பட்ட நபர்கள் சுகாதார அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை அளித்து வருவதை அவதானித்ததாக அவர் குறிப்பிட்டார்.
தவறான தகவல்களை வழங்கும் எந்தவொரு நபரும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர், அஜித் ரோகண எச்சரித்தார்.
இதேவேளை, முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பேணாமலும் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.