பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க, ஜனாதிபதியிடம் தொடர்ந்தும் கொடுத்து வந்த வலியுறுத்தல் காரணமாகவே அவரின் கணவரை ஜனாதிபதி தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமித்தார் என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒரு பிரதம நீதியரசரை உலகில் எங்கும் பார்த்திருக்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தனிப்பட்ட ரீதியில் சிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக பதவிவகிக்க தகுதியற்றவர் என்றும் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை முன்னரே தீர்த்திருக்க முடியும். எனினும் அரசாங்கம் அதனை உரியவகையில் நிறைவேற்றாமை காரணமாகவே இன்று இந்தப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
சிராணி பண்டாரநாயக்க ஊழல்மிக்கவர் என்று தெரியாமலேயே ஜனாதிபதி அவரை பிரதம நீதியரசராக நியமித்தார் என்றும் திஸ்ஸ விதாரண குறிப்பிடடுள்ளார்.
ஜனாதிபதி தமது ஆணைக்கேற்ப செயற்படவில்லை என்பதை காரணம் காட்டி அமரிக்கா பிரித்தானியா உட்பட்ட முதலாளித்துவ நாடுகளும் இன்று ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஜே.வி.பியுடன் இணைந்து இந்தவிடயத்தை பெரிதுப்படுத்துவதாக திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை 13 வது திருத்தச்சட்டத்துக்கு அமைய அதிகரங்களை பகிராவிட்டால், நாடு மீண்டும் 30 வருடங்களுக்கு பின்னோக்கிய நிலைக்கு செல்லும் என்றும் அமைச்சர் திஸ்ஸ விதாரண எச்சரித்துள்ளார்.