த,தே,கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் புதிய கூட்டணிக்கான முயற்சி அரசாங்கத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும். அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கிலேயே இந்த சதித்திட்டம் அரங்கேறுகின்றது. அரசாங்கத்தில் யார் இருக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி இப்போது தீர்மானிக்க வேண்டும் என்று ஜாதிக ஹெலஉறுமையவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு இணைந்த தனிநாட்டுக்கான முயற்சிகள் கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்றுவருகின்றன. இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்தின் உதவியுடனும் புலம்பெயர் அமைப்புக்களின் உதவியுடனும் வடக்கில் பிரிவினையைத் தூண்டி செயற்படுகின்றனர். அதேபோல் முஸ்லிம் நாடுகளின் உதவியுடன் கிழக்கினை பிரிக்க முஸ்லிம் காங்கிரஸ் முயல்கின்றது. இதனைத் தடுக்காவிட்டால் அரசாங்கமே சிக்கல்களை எதிர்நோக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினர்.
அரசாங்கத்தின் கூட்டுக்கட்சிகளின் அண்மைக்கால கருத்துக்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சந்தித்து பேசுவதற்கு எடுத்துவரும் முயற்சிகள் தொடர்பில் வினவியபோதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரச கூட்டு கட்சிகளிடையே ஒரு சில கருத்துக்கள் காணப்பட்டாலும் அனைவரும் அரசாங்கத்தை பலப்படுத்தும் வகையிலேயே செயற்படுகின்றனர். எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஒருசில கட்சிகளே அரசாங்கத்தினுள் இருந்து கொண்டு அரசையே வீழ்த்த நடவடிக்கை எடுக்கின்றதென்பது தெளிவாகத் தெரிகின்றது. நடைபெற்று முடிந்துள்ள மாகாணசபைத்தேர்தல்களில் வடக்கை தவிர ஏனைய சகல மாகாணங்களிலும் ஆளும் தர்ப்பினரே வெற்றிபெற்றுள்ளனர். வடக்கில் தமிழ் மக்கள் மனதில் பிரிவினை வாதத்தினை தூண்டி இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் மீதான தவறான கருத்துக்களை பரப்பி வடக்கு தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றது. எனினும் கிழக்கு உட்பட ஏனைய மாகாணங்களில் மக்கள் உண்மையாகவே அரசாங்கத்தை அதிகரித்தனர். ஆனால், தற்போது அரசாங்கத்தின் ஆளுகைக்குட்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் ஆட்சி மாற்றமொன்றினை ஏற்படுத்தி வடக்கைப் போல் கிழக்கினையும் தனிமைப்படுத்தவே சதித்திட்டம் தீட்டப்படுகின்றது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தினுள் இருந்து கொண்டே ஆட்சியினை வீழ்த்தும் சூழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கின்றது. தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய கூட்டணிக்கான முயற்சிகள் அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். இதனை ஜனாதிபதி சரியாக விளங்கிக்கொண்டு யார் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
அதேபோல், வடக்கு – கிழக்கு இணைந்த தனி நாட்டு முயற்சி இன்று, நேற்று மேற்கொள்ளப்பட்டதல்ல. இவை கடந்த 30 ஆண்டுகளாக முயற்சிக்கப்படுகின்றது. இப்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச உதவியுடனும் புலம்பெயர் அமைப்புகளின் உதவியுடனும் வடக்கிலும் பிரிவினையினை தூண்டி செயற்படுகின்றனர். அதேபோல் முஸ்லிம் நாடுகளினது உதவியுடன் கிழக்கினை பிரிக்க முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியெடுக்கின்றனர். இவர்களின் கூட்டு முயற்சிகளை தடுக்காவிடின் அரசாங்கமே எதிர்காலத்தில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.