இருக்க இடமோ குடிக்கத் தண்ணீரோ உண்ண உணவோ இல்லாமல் நந்திக் கடலேரியை அண்டிய காட்டுப் பகுதிக்குள் கேப்பாபிலவு மக்கள் நேற்று மாலை அநாதைகளாக இறக்கிவிடப்பட்டனர்.நேற்றுமுன்தினம் செட்டிக்குளம் முகாமைத் திடீர் என மூடிய இராணுவத்தினர் அங்கிருந்த இந்த மக்களை அப்புறப்படுத்தினர். இங்கிருந்த 360 குடும்பங்களில் கேப்பாபிலவு பகுதியைச் சேர்ந்த 110 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நேற்றுமுன்தினம் வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் இறக்கி விடப்பட்டனர்.
அவர்களுக்கு உணவு மட்டும் வழங்கப்பட்டது. ஆயினும் அந்த இடத்தில் இருந்து நேற்று மீண்டும் ஏற்றிச் செல்லப்பட்ட மக்கள் நேற்று மாலை நந்திக் கடலேரிக் கரையோரத்தில் உள்ள சூரியபுரம் காட்டுப்பகுதியில் எவ்வித வசதிகளோ, பாதுகாப்போ எதுவுமின்றி இறக்கிவிடப்பட்டுள்ளதாக அந்த மக்கள் உதயனிடம் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அப்பகுதியிலுள்ள ஒருவர் தெரிவிக்கையில் நாங்கள் இங்கு தங்குவதற்கு கூடாரமோ அல்லது மழைக்கு ஒதுங்குவதற்கு கட்டடமோ இல்லை காட்டுக்குள் எந்தப் பகுதியால் யானைகள், கொடிய மிருகங்கள் வரும் என்று உயிரைக் கையில் பிடித்தவாறு இரவைக்கழிக்கின்றோம் என்று கூறினார்.
இந்த மக்களுக்கு நேற்று இரவுவரை உடனடி உணவுப் பொருள்கள் எதுவும் வழங்காததால் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.