ட்விட்டரை வாங்க முற்பட்ட ஃபேஸ்புக்?

குறும்பதிவு சேவையான ட்விட்டரை சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக் வாங்க முற்பட்ட செய்தியில் சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது

faceebook-twitter

சில ஆண்டுகளுக்கு முன் இந்த கோரிக்கையுடன் ஃபேஸ்புக் தங்களை அணுகியதாகவும், ஆனால் அதை ஏற்காமல் நிராகரித்துவிட்டதாகவும் ட்விட்டர் இணை நிறுவனரான பிஸ் ஸ்டோன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். சமூக ஊடகங்களின் இரு தூண்கள் என்று சொல்லப்படக் கூடிய வகையில் ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் பிரபலமாகி இருக்கின்றன. இரு நிறுவனங்களுமே பங்குச்சந்தையில் நுழைந்திருக்கின்றன. இரு நிறுவனங்களுமே வளர்ச்சி பாதையிலும் அதற்கான வழிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றன.

குறிப்பாக பேஸ்புக் எதிர்கால கணக்குகளுடன் புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருவதுடன் தனக்கு வலு சேர்க்ககூடிய இணைய நிறுவனங்களையும் செயலிகளையும் (ஆப்ஸ்) கையகப்படுத்தி வருகிறது. இளைய தலைமுறையை கவர்ந்த வாட்ஸ் அப் செயலியை ஃபேஸ்புக் வாங்கியதும், அதனைத் தொடர்ந்து மெய்நிகர் சேவையான ஆக்குலஸ் ரிஃப்ட் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியதும் இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இடையே, தானாக அழையும் செய்திகளை அனுப்ப உதவும் ஸ்னேப்சேட் செயலியை ஃபேஸ்புக் வாங்க முற்பட்டதும், அதற்கு 3 பில்லியன் டாலர் தருவதாக கூறியும் கூட ஸ்னேப்சேட் அதை ஏற்க மறுத்ததும் இணைய உலகில் வியப்புடன் பேசப்பட்டது.

இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே ஃபேஸ்புக், குறும்பதிவு சேவையான ட்விட்டரை விலைக்கு வாங்க முயன்றிருக்கிறது. இந்த தகவலை ட்விட்டர் இணை நிறுனரான பிச் ஸ்டோன், ஸ்கை நியூஸ் பேட்டியில் கூறியுள்ளார். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கே தொடர்பு கொண்டு ட்விட்டரை வாங்க விரும்புவதாக கூறியதாகவும், உடனே மனம் போன போக்கில் 500 மில்லியன் டாலர் விலை சொன்னதாகவும் ஸ்டோன் தெரிவித்துள்ளார்.

இந்த விலையை கேட்டு ஜக்கர்பர்க் தானாக விலகி விடுவார் என எதிர்பார்த்ததற்கு மாறாக, அவர் அந்த விலையை தர தயாராக இருப்பதாக மறு நாள் கூறிய போது ட்விட்டர் நிறுவனர்கள் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருக்கின்றனர். ஆனால், நிறுவனம் வளரும் நிலையில் தான் உள்ளது எனக் கூறி ஜக்கர்பர்க் கோரிக்கையை நிராகரித்து விட்டனர். இன்று ட்விட்டரின் மதிப்பு. 23 பில்லியன் டாலர். ஃபேஸ்புக், ட்விட்டரை ஏன் வாங்க முற்பட்டது, ட்விட்டர் ஏன் அதை நிராகத்தது என்பவை சுவாரஸ்யமான கேள்விகள். ஆனால், இணைய உலகை பொருத்தவரை ட்விட்டர், ஃபேஸ்புக் வசமாகாமல் தனித்து நின்றிருப்பது தான் நல்லது எனத் தோன்றுகிறது.

Related Posts