டேவிட் கமரூன் இராஜதந்திர ஒழுங்குகளை மீறியுள்ளார்!-இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது இராஜதந்திர ஒழுங்குகளை மீறியுள்ளதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது

இலங்கையின் மூத்த அரசியல்வாதி ஒருவரை கோடிட்டு பிபிசி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

எனினும் தமது இலங்கை பயணம் வெற்றியளித்துள்ளதாக கெமரோன் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கமரூன், இலங்கைக்கு வந்தபோது விருந்தினர் புத்தகத்தில் கைச்சாத்திட மறுத்துள்ளார்.

அத்துடன் தேசிய நடன வரவேற்பையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று இலங்கை அரசாங்கத்தின் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில் பொதுநலவாய நாடுகளின் அமர்வின்போது கமரூன் தமிழர் விடயம் குறித்து பேச்சு நடத்தியமை ஏற்றுக்கொள்ளத்தக்க செயல் அல்ல என்று இலங்கையின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த சில மேற்குலக நாடுகள் முயற்சி

இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த சில மேற்குலக நாடுகள் முயற்சித்து வருவதாக பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இனங்களுக்கு இடையில் முரண்பாடு காணப்படுகின்றது என்பதனை வெளிக்காட்ட சில மேற்குலக நாட்டுத் தலைவர்கள் வெளியிடும் கருத்துக்கள் நகைப்பிற்குரியது.

இலங்கை மக்கள் பற்றிய போதிய தெளிவின்றி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அளவில் சிறியது என்றாலும் இலங்கைத் தீவு தொடர்பில் உலக சமூகத்தின் நன்மதிப்பு அதிகரித்துள்ளது.

இலங்கையில் பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உலக அளவில் இலங்கையை ஜொலிக்கச் செய்ய ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.

பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு போன்றவற்றின் மூலம் இலங்கை தொடர்பாக உலக சமூகத்திற்கு நல்ல செய்திகளை வெளிப்படுத்த முடியும் என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

கம்பளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கமரூன் உண்ட இடத்திற்கு இரண்டகம் செய்தார் – தேசிய சுதந்திர முன்னணி கவலை

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பொதுநலவாய நாடுகளின் தலைவராக வந்து சகல இராஜதந்திர சிறப்புரிமைகளையும் அனுபவித்து விட்டு இலங்கைக்கு எதிராக செயற்பட்டமையானது உண்ட இடத்திற்கு இரண்டகம் செய்தமைக்கு ஈடானது என தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரும் பிரதியமைச்சருமான வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரித்தானிய பிரதமர் இலங்கைக்கு வந்து பிரிவினைவாதத்தை போஷிப்பது போலவும் அதனை வலுப்படுத்துவது போலவும் நடந்து கொண்டார். அதற்காகவே அவர் வருகை தந்தார்.

இலங்கைக்கு எதிராக பல நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். அரச தலைவர்களில் மாநாடு நடந்த பொழுது அவர் அதில் கலந்து கொள்ளாமல் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தார்.

யாழ் நூலகத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை சந்தித்து பேசியிருந்தார். வேண்டுமென்றே வெளியில் தெரியாத அளவிலான இடத்தை அந்த பேச்சுவார்த்தைக்னகு தெரிவு செய்திருந்தார்.

உடைந்த நாற்காலில் அவர்கள் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதை சனல் 4 முழு உலகத்திற்கும் தெரியும் வகையில் ஒளிப்பரப்பியது. தமிழ்த் தலைவர்கள் மாற்றாந் தாய் மனப்பான்மையில் உபசரிக்கப்படுகின்றனர் என உலகத்திற்கு காட்டவே கமரூன் அப்படியான இடத்தை பேச்சுவார்த்தைக்கு தெரிவு செய்தார்.

தமிழ் மக்களின் மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மீறப்படுகிறது என்று காட்டும் தேவையே கமரூனுக்கு இருந்தது.

வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்த பின்னர் கமரூன் உதயன் பத்திரிகைக்கு விஜயம் மேற்கொண்டார். உதயன் என்பது இலங்கையில் இருக்கும் இலங்கை அரசுக்கு எதிரான ஒரே பத்திரிகை. அரசாங்கத்திற்கு எதிரான பல பத்திரிகைகள் இருக்கின்றன. ஆனால் உதயன் நாட்டுக்கு எதிரான பத்திரிகை என்றார்.