டக்ளஸ் தலைமையில்; தான் மக்கள் இழந்தவற்றை ஈடுசெய்து கொள்ள முடியும்: ஆசிரியர் நாக. தமிழிந்திரன்

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் தான் மக்களால் இழந்தவற்றை ஈடுசெய்து கொள்ள முடியுமென யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் ஆசிரியர் நாக. தமிழிந்திரன் தெரிவிததார்.

cen2

யாழ். மத்திய கல்லூரியின் நிறுவுனர் தினமும், 198 ஆவது ஆண்டு நிறைவும் இன்றைய தினம் (01) இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 90 களில் இக்கல்லூரி பெரும் பாதிப்பை சந்தித்திருந்தது.

இந்நிலையில் 1996ஆம் ஆண்டு இக்கல்லூரிக்கு காலஞ்சென்ற இராஜதுரை அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டதன் பின்னர் பாதிப்படைந்த கட்டடங்கள் மீள் திருத்தம் செய்யப்பட்டும் புதுக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டும் புதுப்பொலிவு பெற்றது.

அக்காலப் பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் இக்கல்லூரியில் மகேஸ்வரி கணினி வள நிலையத்தை அமைத்து அதனை திறந்து வைத்தார்.

அதன்மூலம் இக்கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது ஏனைய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் கணனி கல்வியை பெற்றுக் கொள்ளக் கூடியதான வாய்ப்பை வழங்கி வைத்தார் என்றும், அதன்பொருட்டு இக் கல்லூரி மட்டுமல்லாது ஏனைய பாடசாலைகளின் கல்வித்துறை மேம்பாட்டுக்காகவும் அயராது உழைப்பவர் அமைச்சர் என்றும் தெரிவித்தார்.

இம் மாவட்டத்தில் கணினி மட்டுமல்லாது ஏனைய ஒவ்வொரு கல்வித்துறைகளையும் மேம்படுத்தி விருத்தி செய்வதற்கு அமைச்சர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், எமது மக்கள் உண்மையை அறிந்து கொள்ளும் பொருட்டு விழிப்பாக இருக்க வேண்டும். அதன் மூலமே எதிர்காலங்களிலும் எமது கல்விசார் நடவடிக்கைகளாலும் ஏனைய துறைகளாலும் மக்கள் மேம்பாடுகளை காண முடியும்.

சேவை செய்பவர்களுக்கே மக்கள் தமது முழுமையான பங்களிப்பை வழங்கும் பட்சத்திலேயே இவ்வாறான மேம்பாடுகளை நாம் காண முடியும்.

இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் தான் மக்கள் இழந்தவற்றை மீண்டும் ஈடு செய்து கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்தாபகர் தினமும், 198ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் கல்லூரி அதிபர் எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதனையொட்டி மத்திய கல்லூரி ஆசிரியர்களுக்கும் பழைய மாணவர்களுக்குமிடையே நடத்தப்பட்ட டுவென்டி 20 துடுப்பாட்டப் போட்டியில் பழைய மாணவர் அணியினர் வெற்றியை தமதாக்கியிருந்தனர்.

நிறைவில் வெற்றி பெற்ற பழைய மாணவர் அணியினருக்கும், ஆசிரிய அணியினருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 2016ஆம் ஆண்டு 200ஆவது ஆண்டை கொண்டாடவுள்ள அதேவேளை, வடமாகாணத்தில் 200ஆவது வருடத்தை பூர்த்தி செய்கின்ற பாடசாலைகளில் முதலாவதாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், கல்லூரி அதிபர் எழில்வேந்தன், பிரதி அதிபர்களான பாலபவான், லோகேஸ்வரன், பழைய மாணவர் சங்கச் செயலாளர் பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor