ஜெயபாலனை மனிதாபிமானத்துடன் நோக்க வேண்டும்: ஈ.பி.டி.பி

கவிஞரும் நடிகருமான ஜெயபாலனை மனிதாபிமானத்துடன் நோக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தலைமையிலான ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளது.

jeyapalan-4

ஜெயபாலனின் கருத்துச் சுதந்திரத்தையும் தாயாருக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் உள்ள உரிமையையும் மனிதாபிமான அடிப்படையிலேயே நோக்கப்பட வேண்டும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியினால் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கவிஞர் ஜெயபாலன் கைதுசெய்யப்பட்டிருப்பது தொடர்பாக பல்வேறு தளங்களில் பல்வேறு கோணங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நீண்ட காலமாக நோர்வேயிலும் இந்தியாவிலும் தங்கியிருந்த ஜெயபாலன் தனது தாயாரின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாங்குளத்துக்குச் சென்றபோது கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவியினால் கூறப்பட்டிருந்தது.

அவர் சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வருகை தந்து, அவ்விஸா விதிமுறைகளுக்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபட்டதனால் அவரை குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தடுத்து வைத்துள்ளதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தின் இறுதி வாரமானது பிரபாகரனின் பிறந்த தினத்தை ஒட்டியதாக இருப்பதால் தேவையற்ற அசம்பாவிதங்களுக்கு இடமளித்துவிடக்கூடாது என்பதில் கண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பது வழமையாகும். இக்காலகட்டத்தில் ஜெயபாலனின் வருகையும், அவர் காட்டிய பரபரப்பும் இந்த அசம்பாவிதங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கலாம். எனவே, அவரின் முதுமையையும் சூழலையும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.

அதன் அடிப்படையில் கவிஞர் ஜெயபாலன் அவர்களை விடுதலை செய்து நோர்வேயிற்கு திருப்பி அனுப்புவதற்கு மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈ.பி.டி.பி கேட்டுக்கொள்கின்றது.

கவிஞர் ஜெயபாலனின் விடுதலை தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உரியவர்களுடன் பேச்சுக்களை நடத்தவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முயற்சிகள் மேற்கொண்டுள்ளன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.