நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை கென்யா நைரோபியைச் சென்றடைந்தார்.
ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதியை கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யாட்டா, உப ஜனாதிபதி வில்லியம் ரூடோ மற்றும் வெளிவிவகாரம், சர்வதேச வர்த்தக அமைச்சின் அமைச்சரவை செயலாளர் அமீனா மொஹமட் ஆகியோர் வரவேற்றனர்.
இங்கு ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதையொன்றும் வழங்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை நைரோபியின் புறநகரான கஸரானியிலுள்ள மொய் சர்வதேச விளையாட்டுக் கட்டிடத்தொகுதியில் நடைபெறவுள்ள கென்ய சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார்.
1963 ஆம் ஆண்டு கென்யா பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இவ்வருடம் நடைபெறும் கொண்டாட்டங்கள் 50 வருடங்களில் நடைபெறும் மிகப்பெரும் கொண்டாட்டமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு நாட்டுத் தலைவர்களும் சனிக்கிழமை (டிசம்பர் 14) அரச இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். வர்த்தகம், சுற்றுலாத்துறை, கலாசாரக் கூட்டுறவு போன்ற துறைகளில் இலங்கையும் கென்யாவும் பல்வேறு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபிரிக்காவிலுள்ள ஐ.நா. தலைமையகமான நைரோபியில் இருக்கும் ஐ நா அலுவலகத்திற்கும் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார். நிவ்யோர்க் மற்றும் ஜெனீவாவுக்கு வெளியே உள்ள மிகப்பெரும் ஐ நா அலுவலகம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நைரோபி ஐ நா அலுவலக பணிப்பாளர் நாயகம் திருமதி சஹ்லீ வோர்க் சிவ்டே மற்றும் ஐ நா சூழல் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் கென்யாவிலுள்ள யு என் ஹெபிடட் தலைவர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
இவ் விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை வர்த்தக மன்றத்திலும் கலந்துகொள்ளவுள்ளதுடன் கென்ய வர்த்தக சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளார். மேலும் கென்ய தனியார்த்துறை கூட்டமைப்பின் 10 ஆவது ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்திலும் கலந்துகொள்வார்.
ஜனாதிபதி பங்குபற்றும் ஏனைய நிகழ்வுகளுள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முதற்பெண்மணிக்கும் ஜனாதிபதி கென்யாட்டாவினால் விழங்கப்படும் அரச விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளவுள்ளார்.
காலம் சென்ற ஜனாதிபதி ஜோமோ கென்யாட்டாவின் கல்லறையில் மலர் வளையம் வைக்கவுள்ளதுடன் நைரோபி பௌத்த விகாரைக்கும் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார். இரண்டாவது முறையாக கென்யாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முதற்பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷவும் இணைந்துகொண்டுள்ளார்.
கடைசியாக 2000 ஆம் ஆண்டில் கென்யாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடியிருப்பாளர் நிகழ்ச்சி நிரல் தொடர்பான ஐ நா பொதுச்சபையின் விசேட கூட்டத்தொடருக்கான தயாரிப்புக்குழுவின் ஆரம்ப கூட்டத்தொடரிலும் கலந்துகொண்டார்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிசும் இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டதுடன், சிவில் விமான சேவைகள் அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.