ஜனநாயக வழியில் போராடுவதற்காக தேர்தலை பயன்படுத்த வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

vicknewaran-tnaஆயுத வழியில் போராடிய நாம் தற்போது ஜனநாயக வழியில் போராடுவதற்காக மாகாண சபைத் தேர்தலினைப் பயன்படுத்த வேண்டும்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். சுன்னாகம் பஸ் தரிப்பிட முன்றலில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிராசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘தமிழ் மக்கள் அரச சார்பான கட்சிக்கு வாக்களித்து அக்கட்சியினை வெற்றிபெறச் செய்தால் வடபகுதியில் இராணுவத்தினரின் ஆட்சியே இருக்கும். இராணுவத்தினரே மக்களைக் கட்டுப்படுத்துவர்.

இதனால் மக்களை இந்நிலையிலிருந்து விழிப்படையச் செய்யவேண்டும். அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் பாடுபடவேண்டும்.

அனைத்து மக்களும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏனெனில் இந்த வடமாகாண சபை தேர்தலின் வெற்றி மூலம் எமது பிரச்சினைகளை சர்வதேச உதவியுடன் தீர்த்துக் கொள்ள முடியும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.