ஜனநாயகத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல் கெஹலிய பேசுகிறார் – சர்வேஸ்வரன்

kanthaiya-sarveswaranவடமாகாண சபையில் மத்திய அரசினை நோக்கி மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை, ‘அது அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு உட்பட்டதல்ல வடமாகாணசபைக்கு இவ்வாறான விடயம் தொடர்பாக எதனையும் கோரும் உரிமை கிடையாதெனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருப்பதாவது அவர் ஜனநாயகத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ளவில்லையென்றே தோன்றுகின்றது என வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக சர்வேஸ்வரனால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது

வடமாகாண சபையின் கடந்த அமர்வில் (18.02) போக்குவரத்து, வர்த்தக, மற்றும் வாழ்வாதார வசதிகள் கருதி பலாலி, திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலிருந்து இந்தியாவிற்கு விமான சேவை, தலைமன்னார் ,ராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் வர்த்தகத் துறைமுகமாக மாற்றப்படவேண்டும் என்ற தீர்மானங்கள் சபையின் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருந்தன. இந்தத் தீர்மானங்கள் மத்திய அரசினை நோக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆகும்.

இருந்தும் இது தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அண்மையில் கருத்துத் தெரிவிக்கையில்,

‘வடமாகாணசபைக்கு விமானசேவை மற்றும் கப்பல் சேவை தொடர்பாக எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் கிடையாது. இது அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு உட்பட்டதல்ல என்றும் எனவே வடமாகாணசபைக்கு இந்த விடயம் தொடர்பாக எதனையும் கோரும் உரிமை கிடையாது.

அத்துடன், 13 ஆவது திருத்தத்தின் படி விமானசேவை மற்றும் துறைமுகங்கள் முழுமையாக மத்திய அரசாங்கத்துக்கே உரியன என்றும்’ அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த தீர்மானங்கள் மத்திய அரசை நோக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆகும். ஜனநாயக செயன்முறையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எந்த பிரதிநிதிகள் சபையும் அந்த நாட்டின் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் உரிமையுண்டு. இது அடிப்படை ஜனநாயக உரிமை மட்டுமன்றி ஜனநாயகக் கடமையும் ஆகும்.

மேலும் இவ்விடயங்கள் முழுமையாக மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்துக்குட்பட்டதென்றும் எனவே வடக்குமாகாண சபை எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் இல்லை என்றும் அமைச்சர் பதிலளித்திருப்பதானது, மத்திய அரசை நோக்கி மேற்கொள்ளப்பட்ட இத்தீர்மானங்களை அவர் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதை வெளிப்படுத்துகின்றது. அனைத்துக்கும் மேலாக மேற்படி விடயங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து மீள ஆரம்பிக்கக் கோரும் தீர்மானங்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றே தோன்றுகின்றது.

விடயம் தொடர்பான ஞானமுள்ள பொறுப்புள்ள அமைச்சராக இருந்தால் வடக்கு மாகாண சபையின் தீர்மானங்களை மத்திய அரசு கவனத்திலெடுக்குமென்றோ அல்லது செயற்படுத்துமென்றோ பதிலளித்திருப்பார். மாறாக இலங்கையின் அண்மைக்கால வரலாறோ அல்லது ஜனநாயகம் பற்றிய அடிப்படைகளோ, மாகாணசபைகளின் உரிமைகள், கடமைகளையோ புரிந்து கொள்ளாமல் அமைச்சர் பதிலளித்திருக்கிறார். மத்திய அரசின் ஆட்சியில் இத்தகையவர்கள் அமைச்சர்களாக இருப்பது துரதிர்ஷடமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts