எனக்கும் என் தந்தைக்கும் எந்தளவுக்கு சேறு பூசவேண்டுமோ அந்தளவுக்கு சேறு பூசவும் என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எங்களுடைய அம்மாவையோ, குடும்பத்தையோ அரசியல் சேறு பூசுவதற்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
என்னுடைய தாய், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்கத்தை களவெடுக்கவில்லை. முன்னாள் பிரதிபொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி என்று சொல்லப்படுகின்ற பெண்ணினால் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் செய்துள்ள முறைப்பாட்டில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும் அந்த முறைப்பாட்டை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
என்னுடைய குடும்பத்தில் நானும் எனது தந்தையுமே அரசியல் செய்தோம். என் இளைய சகோதரர்கள் இருவரும் அரசியலில் ஈடுபடவில்லை. அரசியல் ரீதியில் ஏதாவது பழிவாங்கல்களை மேற்கொள்ளவேண்டுமாயின் அதற்காக என்னையும் என் தந்தையும் பயன்படுத்தவும் பலிவாங்கல் விவகாரங்களில் குடும்ப உறுப்பினர்களை இழுக்கவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
எனக்கு தெரிந்த வகையில் என்னுடைய தாய், தங்கத்தை களவெடுக்கவோ அல்லது ஊழல் மோசடிகளில் ஈடுபடவோ இல்லை என்பதனால் இந்த தங்க விவகாரம் தொடர்பில் உண்மை வெளிவரும் என்று தான் எதர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.