Ad Widget

செல்வத்தை அள்ளித்தரக்கூடிய பயிர்ச்செய்கையை மேற்கொள்வோம்

நாம் ஏனையவர்களின் கைகளை எதிர்ப்பதை விட எமக்கான செல்வத்தை அள்ளித்தரக்கூடிய பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு அதன் மூலம் வருவாயைப் பெற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கீழுள்ள இத்தாவில் ஆயுர்வேத வைத்தியசலை மற்றும் உப அலுவலகத்தின் திறப்பு விழா, நேற்று திங்கட்கிழமை (23) மாலை நடைபெற்ற போது, அதில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

முகமாலைப் பிரதேசம் எவ்வளவு பெரிய அழிவுகளை எதிர்கொண்டது என்பதனை நான் நன்கு அறிவேன். யுத்த காலத்தில் போர்த்தள முனையாக பிரதேசம் காணப்பட்டது. எறிகணை வீச்சுக்கள், விமானக் குண்டு வீச்சுக்கள், துப்பாக்கிப் பிரயோகங்கள், கண்ணி வெடிகள் என வெடிச் சத்தத்துக்கு குறைவே இல்லாத ஒரு பிரதேசம். அது மட்டுமல்லாமல் இங்கே காணப்பட்ட பெரிய தென்னந்தோப்புக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு செல்வச் செழிப்புடன் விளங்கிய பிரதேசம் வெறும் கட்டாந் தரையாக மாற்றப்பட்டது.

மக்கள் இடம்பெயர்ந்து அயல் கிராமங்களிலும் தென்மராட்சி, வடமராட்சி, வலிகாமம் ஆகிய பகுதிகளை நோக்கியும் பெருந்தொகையாகச் சென்றிருந்தனர். இந்நிலையில் இங்கே காணப்பட்ட பிரதேச சபை உப அலுவலகம் குண்டு வீச்சில் தரைமட்டமாக்கப்பட்டது. அருகில் இருந்த பாடசாலை இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டது. மிக அமைதியான சூழலில் நிம்மதியாக வாழ்ந்து வந்த குடும்பங்கள் போக்கிடம் இல்லாது அங்கும் இங்குமாக இடம்பெயர்ந்து சென்றனர்.

இந்நிலையில் இவ்வைத்தியசாலையும் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து ஈற்றில் இயக்கச்சிப் பிரதேசத்தில் இயங்கி வந்ததாக அறிகின்றேன்.

போர் முடிவடைந்த பின்னர், இப்பகுதியில் காணப்பட்ட மிகச் செறிவான நிலக்கண்ணி வெடிகள், வெடிக்காத எறிகணைகள் என பல தரப்பட்ட வெடிபொருட்கள் இப்பகுதி முழுவதும் பரந்து கிடந்த காரணத்தினால் மக்கள் மீளக்குடியமர தயங்கினர்.

இப்பகுதியில் உசன் கந்தசுவாமி கோவில் நிர்வாகத்துக்குச் சொந்தமான பல ஏக்கர் காணிகள் கவனிப்பாரற்று கால் வைக்கக்கூட முடியாத நிலையில் மிகக்குறைவான விலைக்கு விற்பனை செய்வதற்கும் தயாராக இருந்ததாகவும் எனக்கு எடுத்துக் கூறப்பட்டது.

எனினும், நிலக் கண்ணிவெடி அகற்றும் குழுவினரால் இப்பகுதிகளிலுள்ள பெருவாரியான கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மெல்ல மெல்ல குடியேறித் தமது இயல்பு வாழ்க்கைக்குத் தம்மை இன்று தயார்படுத்தி வருவது சற்று மன ஆறுதலைத் தருகின்றது.

எந்த ஒரு சூழலிலும் நாங்கள் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும். இன்றைய ஒரு குறிப்பிட்ட அவலநிலை என்றென்றும் இருக்கும் என்று மனமுடைந்து இருந்துவிடக் கூடாது.

அன்றைய அவல நிலை இன்று மறைந்து வருவது இயற்கையின் இந்தப் பரிமாணத்தையே தெற்றென விளக்குகின்றது.

இந்நிலப்பரப்பானது கூடுதலாக மணற் பாங்காக காணப்படுவதால் இப்பகுதி தென்னைச் செய்கைக்கு மிக உகந்த இடமாக அடையாளங் காணப்பட்டு மிகப் பெரியளவில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தென்னைப் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு எமது தெங்குத் தேவைகள் அன்று பூர்த்தி செய்யப்பட்டுவந்தன.

அதன்பின் அழிவுகள் எம்மை அணைத்தன. ஆனால் பழைய நிலையை மீண்டும் கொண்டு வருவதற்கு இன்று எமக்குக் குறைந்தது ஐந்து அல்லது ஆறு வருடங்களாவது தேவைப்படும். எனினும், இம்முயற்சிகளில் நீங்கள் மனந் தளராது ஈடுபட வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.

தெங்குப் பயிர்ச் செய்கையை ஊக்குவிப்பதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள தெங்கு அபிவிருத்தி நிறுவனம் தென்னம் நாற்றுக்கள் மற்றும் நீர் பாய்ச்சும் கருவிகள் என பலதரப்பட்ட உதவிகளை மானிய அடிப்படையிலும் இனாமாகவும் வழங்கி வருகின்றார்கள். அவற்றைப் பெற்றுப் பயனடைய எமது மக்கள் முன்வர வேண்டும் என்றார்.

Related Posts