தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பிரேம்நாத் ஆகியோர் மீது குற்றப்புலனாய்வு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் மா.கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது குறித்து தான் பொலிஸ் மா அதிபருக்கும், யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக யாழ். நீதவான் மா.கணேசராஜா தெரிவித்தார் என இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
நீதித்துறைக்கும் தனக்கும் நேரடியாகவும் பத்திரிகை மூலமும் மிரட்டல் விடுக்கும் வண்ணம் சுமந்திரனும், பிரேம்நாத்தும் பத்திரிகை ஊடாக கருத்து வெளியிட்டுள்ளதாகவும் இந்த விடயம் குறித்தே குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்கும்படி பொலிஸ் மா அதிபருக்கும் யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் பணித்துள்ளதாக மா.கணேசராஜா குறிப்பிட்டார் என அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது!
முன்னதாக யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி கணேசாரசாவினால் தமது உயிருக்கு ஆபத்திருப்பதாக கூறி உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பிறேமானந்த நேற்று முன்தினம் கொழும்பு உயர் நீதிமன்றில் ரீட் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், உதயன் பத்திரிகை ஆசிரியரையும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் குற்றப்புலனாய்வுத் துறையின் விசாரணைக்குட்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நில ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு குறித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்திற்கு தடை விதித்தமை தொடர்பில் சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் பாராளுமன்றில் விமர்சனம் செய்திருந்ததாக கூறிய யாழ். நீதிபதி அதற்காக அவரை விமர்சனம் செய்திருந்தார்.
இதன் பின்னர் இந்த விவகாரம் குறித்து சுமந்திரன் நீதிமன்றில் விளக்கம் கேட்டிருந்த போது நீதிபதி அதற்காக மன்னிப்பு கேட்டிருந்ததாக உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.இதற்கான உதயன் பத்திரிகையின் ஆசிரியர் அண்மையில் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டு, கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன் மன்னிப்புக்கோரவும் கேட்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் உயர் நீதிமன்றில் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் ரீட் மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த விடயத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்ட நீதிபதி கணேசராசா, தனக்கும் தனது குடும்பத்திற்கும் உயிராபத்து இருப்பதாக தெரிவித்து சுமந்திரன் மற்றும் உதயன் பத்திரிகை ஆசிரியர் ஆகியோரை குற்றப்புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.நீதித்துறைக்கும் பத்திரிகைத்துறைக்கும் இடையிலான இந்த முறுகல் யாழ்.மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.