Ad Widget

சிறுவர்கள் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு விசேட நீதிமன்றச் செயற்பாடு அவசியம் – பாராளுமன்றில் டக்ளஸ்

நாடாளுமன்ற ஒத்திவைப்புப் பிரேரணையில் அதி உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்ட வாதப் பிரதிவாதங்களின்போது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் (06) ஆற்றிய உரை

கௌரவ சபாநாயகர் அவர்களே….

இன்றைய நாளில் எமது எதிர்காலச் சந்ததியினரின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலம் தொடர்பாக ஆக்கபூர்வமாக ஆராயப்பட வேண்டும். துரதிஸ்டவசமாக எமது நாட்டில் சிறுவர்கள் மற்றும் இளம்பராயத்தினர் மீதான வன்முறைகள் அதிகரித்து வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

சிறுவர்கள் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் நாகரீகச் சமூகத்தை தலைகுனியச் செய்வதாகவே நடைபெறுகின்றது. யுத்தம் நடந்த காலப்பகுதியில் வீட்டைவிட்டு வெளியில் செல்கின்ற ஒருவர் மீண்டும் வீடு வந்து சேரும்வரை குடும்பத்தினர் அச்சத்துடனேயே இருந்தனர்.

அந்த யுகம் இப்போது இல்லை என்றபோதும், இப்போது பெண்கள் மற்றும் சிறுவர்களின் சுதந்திரமான நடமாட்டம் அச்சத்தைக் கொடுப்பதாக மாறியுள்ளது. நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய அண்மைய சம்பவங்களான,

புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான பாலியல் வன்கொடுமையும், கொலையும், கிளிநொச்சியில் மூன்றுவயதுச் சிறுமியை சிறுவன் ஒருவன் கடத்தி, கொலை செய்தமையும், வவுனியா தோனிக்கல்லில் சிறுவன் ஒருவன் தனது சகோதரனையே கொலை செய்ததும், கொட்டதெனிய சிறுமி சேயா வீடு புகுந்து கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும், அத்துருகிரியவில் பத்து வயதுச் சிறுவன் ரவிந்தை அவரது தகப்பன் மீதான கோபத்துக்காக படுகொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் குறிப்பிடக் கூடியவையாகும்.

சிறுவர்கள் மீதான வன்முறைகள், பாலியல் தொல்லைகள் என்பன பெரும்பாலும், குடும்ப அங்கத்தவர்களாலும், குடும்பங்களோடு நெருக்கமான உறவைக் கொண்டிருப்பவர்களாலுமே இடம்பெறுவதாக சமூக அமைப்புக்கள் சுட்டிக் காட்டுகின்றன.

ஆகவேதான் சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் முதலில் பெற்றோர்கள் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும் என்றும் சமூக அக்கறையாளர்களும், காவல் துறையினர் மற்றும் சிறுவர் நலன் சார்ந்த அமைப்புக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே…..

சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகள், கொடூரமான கொலைகளைப் புரிவோருக்கு தண்டனைகள் கடுமையானதாகவும், அதுவேளை மற்றவர்களுக்குப் பாடமாகவும் அமையவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அதேவேளை சிறுமி சேயாவின் படுகொலையோடு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட 17 வயது மாணவனின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ள சம்பவத்தையும் நாம் ஒதுக்கிவிட முடியாது.

குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிடக்கூடாது. அதேவேளை நிரபராதிகள் அநாவசியமாக தண்டிக்கப்படக் கூடாது என்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நமது நாட்டில் யுத்தத்தில் பெற்றோரை இழந்தவர்கள், பாதுகாவலர்களை இழந்தவர்கள், அங்கவீனமானவர்களென ஆயிரக்கணக்கான சிறுவர்கள் அநாதரவாகி இருக்கின்றார்கள்.

அன்மையில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பிலான அறிக்கையில் இலங்கையில் சிறுவர்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு சிறுவர் போராளிகளாக யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்கள், காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் விசேடமாக கவனிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக் கொலைகள் தொடர்பில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில் ஏற்படும் கால தாமதங்களே குற்றங்கள் அதிகரிக்கக் காரணமாக அமைவதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கூறப்படுவதையும் மறுக்க முடியாது.

அதிகரித்திருக்கும் போதைப் பொருள் பாவனையும், கட்டுப்பாடற்ற இணையத்தளங்களும், கண்கானிப்பற்ற நெட்கபேக்களின் பாவனையும் சிறுவர்களை தவறாக வழிநடத்தும் காரணங்களாக இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சிறுவர்களின் முறைப்பாடுகள் தொடர்பில் பெற்றோர்கள்,பாதுகாவலர்கள் கவனம் செலுத்துவதும், குற்றச்சாட்டுக்கள், முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விரைந்து செயற்படுவதும் அவசியமாகும்.
எமது நாட்டின் சிறுவர்களை பாதுகாப்பதற்காக நாம் வளங்களை அதிகரித்துக் கொள்ள வேண்டும். சகல மாவட்டங்களிலும் சிறுவர் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். சிறுவர்கள் தொடர்பான எந்த வழக்கு விசாரணையிலும் விசேட பயிற்சி பெற்ற பொலிசாரும் உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
இத்தகைய குற்றங்கள் இழைக்கப்படும்போது சராசரியாக எட்டு வருடங்களுக்கு மேல் தீர்ப்பிற்காக காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் பெருந்தொகையான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடப்பதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். எனவே சிறுவர்கள் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு விசேட நீதிமன்றச் செயற்பாடு அவசியமாகும்.

குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் சிறுவர்கள் பராமரிப்பற்றவர்களாகவும், கல்வியைத் தொடர முடியாதவர்களாகவும், பாதுகாப்பற்றவர்களாகவும் இருக்கின்றார்கள். அன்மைய புள்ளிவிபரம் ஒன்று, இலங்கையில் கூடுதல் வறுமையோடு மக்கள் முல்லைத்தீவில் வாழ்வதாக சுட்டிக்காட்டி இருந்தது.
அதாவது நூற்றுக்கு முப்பது விகிதமாக அந்தப் புள்ளிவிபரம் குறிப்பிட்டிருந்தது. அதுபோலவே யுத்த அழிவுகளையும், இழப்புக்களையும் எதிர்கொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றமும், புனரமைப்புப் பணிகளும், வாழ்வாதாரங்களும் போதுமானதாக இல்லை.

அங்கு வாழும் சிறுவர்களின் போசாக்கு, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, இதர உரிமைகள் மீது கூடுதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சிறுவர்கள் தொடர்பான பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனாலும் யுத்தப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சிறுவர்களினதும், பெண்களினதும் பிரச்சனைகள் அதிகமாக இருப்பதற்கு காரணம், அந்த மக்களின் வாக்குகளை அபகரித்து அந்த மக்களை தொடர்ந்தும் வறுமைக்குள்ளும், பாதிப்புகளுக்குள்ளும் தள்ளிவிட்டு சுயஇலாப அரசியல் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும் காரணமாக அமைந்துள்ளது.
தேர்தல் காலங்களில் தமிழ் இளையோர்களுக்கு மதுபானங்களை வாங்கிக் கொடுத்து அவர்களது கலாசாரத்தைச் சீரழிக்கின்றார்கள் தமிழ் அரசியல்வாதிகள்.

இதேவேளை இளையோருக்கு வேலை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து தேர்தலுக்காக அவர்களைப் பயன்படுத்திவிட்டு தேர்தல் முடிந்தவுடன் அவர்களைக் கைவிட்டு விடுகிறார்கள்.

இதனால் ஏமாற்றமடைந்த இளையோர்கள் விரக்தியடைகிறார்கள். அவர்களுக்கு வேலை பெற்றுக்கொடுக்கும் எந்தப் பொறிமுறைகளும் தமிழ் அரசியல்வாதிகளிடம் இல்லை. அதற்கான வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்துவதுமில்லை.

புலம்பெயர்ந்து வருகின்ற உண்டியல் பொருளாதாரம் தமிழ் இளையோரின் சுயமான முயற்சிகளுக்குத் தடையாக இருக்கின்றது. அவர்கள் உண்டியல் பொருளாதாரத்தில் தங்கியிருந்துகொண்டு சோம்பல்த் தன்மையோடும் வீணான பொழுதுபோக்கு தன்மையோடும் வாழ்வதற்கான கட்டாயம் உருவாகின்றது.

ஆகவே, புலம்பெயர் நாடுகளிலுள்ள உறவுகள் இங்குள்ள இளையோர்களுக்கு உதவ விரும்பினால் அவர்களது நிரந்தர பொருளாதார ஊக்குவிப்புக்கான உதவிகளை புரிவதே சிறந்தது.

துரதிஸ்டவசமாக பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் கட்டுப்பட்டு நடக்கின்ற நிலைமை மிக அரிதாகியுள்ளது. இதற்குக் காரணம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்வு சீர்குலைக்கப்பட்டிருந்ததே காரணமாகும்.
நாட்டில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. சிறுவர்களை பராமரிப்பதாக கூறுகின்றவர்கள் அதை ஒரு தொழிலாக மட்டும் பார்க்கக்கூடாது. மனித நேயத்தோடும், சேவை மனப்பான்மையோடும் அதைச் செய்யவேண்டும். அங்கும் சிறுவர்கள் துஸ்பிரயோகங்களுக்கு இடமளிக்கப்படக்கூடாது. இவ்வாறான சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் தொடர்பாக கூடுதல் கவனம் எடுக்கப்படுவது அவசியமாகும்.

அதேவேளை சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக ஊடகங்கள் செய்திகளை வெளியிடும்போது பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறான சம்பவங்களைத் தூண்டிவிடுகின்ற விதமாக இல்லாமல் ஏனையவர்களை விழிப்புணர்வுக்கு உட்படுத்தும் வகையில் அமைய வேண்டும். செய்திகள் ஏற்படுத்தும் தாக்கமானது பாதிக்;கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குடும்பத்தினரை சமூகத்திலிருந்து ஒதுக்கி விடுவதாக அமைந்துவிடக் கூடாது.

ஆகவே சிறுவர் விவகார அமைச்சு மற்றும் சிறுவர் நலன் சார்ந்த அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், சமய அமைப்புக்கள், சனசமூக நிலையங்கள், மாதர் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஆகியவை இணைந்து சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பிலும், அவர்களது உரிமைகள் தொடர்பிலும் சமகாலச் சவால்களுக்கு ஏற்ற வேலைத்திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன்.

Related Posts