சிறுமி துஷ்பிரயோகம்: காதல் நாடகமாடியவர் உட்பட நால்வர் கைது

பருத்தித்துறை, சித்திவிநாயகர் பகுதியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர் உட்பட 4 சந்தேகநபர்களை, பருத்தித்துறைப் பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை (20) கைதுசெய்தனர்.

34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை காட்டி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.

அதன்பின்னர், இந்த விடயத்தை வெளியில் தெரிவித்தால் கொலை செய்வேன் எனச் சிறுமியை மிரட்டியுள்ளார்.

எனினும், நடந்த விடயத்தை சிறுமி, தனது தாயாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, தாயார் இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

அதற்கிணங்க பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். எனினும், போதிய ஆதாரங்கள் இல்லையெனவும், பொய்யான முறைப்பாடு எனத் தெரிவித்து சந்தேகநபர் விடுவிக்கப்பட்டார்.

இதேவேளை, இந்த விடயத்தைச் சமூக ஆர்வலர் ஒருவர், வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். அதற்கிணங்க அவர் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் சந்தேகநபர்கள், இன்று கைதுசெய்யப்பட்டனர்.

சிறுமி, மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor