சிறிய, நடுத்தர கைத்தொழில் அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்பு விளக்கவுரை

JITF1இலங்கை கைத்தொழில் வணிக சம்மேளனம் மற்றும் யாழ்.வணிகர் சம்மேளனம் ஏற்பாட்டில், வடமாகாணத்தின் சிறிய நடுத்தர கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் தொடர்பாக விளக்கவுரை வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு யாழ்.நூலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறிய, நடுத்தர கைத்தொழில் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள், பாரம்பரிய சிறிய நடுத்தர கைத்தொழில் அமைச்சின் நியதிகள், வடமாகாணத்தின் சக்திமிக்க சேவைகளின் தரத்தை உயர்த்துதல், மற்றும் பங்குச் சந்தையில் முதலீடுதல் போன்ற தலைப்புக்களின் கீழ் விளக்கவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

இந்நிகழ்வில் விளக்கவுரைகளை பாரம்பரிய, சிறிய நடுத்தர கைத்தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஞானயோதி, யாழ்.வணிகர் சங்கச் செயலாளர் பூரணச்சந்திரன், இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி பிராந்திய முகாமையாளர் எஸ்.பிராபாகரன் ஆகியோர் வழங்கினர்.

இதன்போது உரையாற்றிய பாரம்பரிய கைத்தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஞானஜோதி கூறுகையில்,

‘இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் வடமாகாணத்தின் பங்கு 4 வீதமாகவே இருக்கின்றது. இந்நிலையில் இருந்து வடமாகாணத்தை முன்னேற்ற வேண்டும்.

இதற்காக வடமாகாணத்தில் சிறிய, நடுத்தர கைத்தொழில்களை ஊக்குவிப்பதற்காக குறைந்த வட்டியிலான கடன்கள், மூலப்பொருட்கள் பெற்றுக்கொடுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகளைச் செய்து கொடுக்கும் நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.

அரசாங்கத்தின் வறுமையை ஒழிப்போம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பொருள் உற்பத்தி எனும் நடவடிக்கையை வடமாகாணத்திலும் மேற்கொள்ளவுள்ளோம். இதனால் சந்தைப்படுத்தல் என்பது இலகுபடுத்தப்பட்டு குறிப்பிட்ட ஊரானது பொருளாதார வளர்ச்சி பெறுகின்றது.

சிறிய கைத்தொழில்களில் புதிய தொழில்நுட்பங்கள், முறைகள் புகுத்தப்படும் போது அவை மில்லியன் ரூபாய் பணம் தரும் தொழிலாக மாற்றமடையவும் செய்கின்றது.

இதசுகாக சிறிய கைத்தொழிலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு உபகரணங்களையும் வழங்கி, கைத்தொழிலினை தொடர்ந்து மேற்கொள்வதற்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன்களும் பெற்றுக்கொடுக்கப்படும்’ என்றார்.

Recommended For You

About the Author: Editor